அண்ணாநகர்: காதலித்துவிட்டு திடீரென பேசாமல் இருந்ததால், 15 வயது சிறுமி படத்துடன் ஐலவ்யூ என பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சிறுவனை மகளிர் போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று இரவு 45 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில், “அடையாளம் தெரியாத வாலிபர் இன்ஸ்டாகிராம் மூலம் எனது மகளின் படத்துடன் ஐ லவ் யூ என பதிவு செய்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததை உறவினர்கள் பார்த்துவிட்டு அந்த வாலிபர் யார் என கேட்டு வருவதால் எங்களால் பதில் சொல்ல முடியாமல் மனவேதனையில் இருந்து வருகிறோம். மகளுக்கு லவ் டார்ச்சர் கொடுத்து வரும் வாலிபர் யார் என்பதை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
அதன்பேரில் அனைத்து மகளிர் போலீசார் நடத்திய முதல் கட்டவிசாரணையில், இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு லவ் டார்ச்சர் செய்து ஐ லவ் யூ பதிவு செய்தது 16 வயது சிறுவன் என்றும், இருவரும் ஒரே பள்ளியில் படித்து வரும்போது ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஒரு வருடமாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் சிறுவனின் நடவடிக்கை சரி இல்லாததால் இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பிரச்னை அதிகமானதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துள்ளனர். அதன்பிறகு சிறுமி, சிறுவனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுவன், சிறுமியிடம் மீண்டும் பேசுவதற்கு முயற்சி செய்து காதலிக்குமாறு டார்ச்சர் செய்து மிரட்டி வந்துள்ளார்.
இதனால் மனமுடைந்த சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கஷ்டப்படுவார்கள் என நினைத்து சிறுவனிடம் போன் செய்து இனிமேல் என்னை தொந்தரவு செய்யாதே என கண்டிப்புடன் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், சிறுமியின் படத்துடன் ஐ லவ் யூ என இன்ஸ்டாகிராம் மூலம் பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் சிறுமிக்கு லவ் டார்ச்சர் கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த சிறுவன் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து சிறுவன் வீட்டிற்கு அனைத்து மகளிர் போலீசார் சென்றபோது, போலீசார் வருவதை முன்பே அறிந்த சிறுவன் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான சிறுவனை பிடிக்க அனைத்து மகளிர் போலீசார் பல கோணங்களில் விசா ரணை செய்து தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.