சமயபுரம்: பைக்கில் வீலிங் சாகசம், அதிவேக பயணம் என பல்வேறு சாகசங்களை செய்து அதை வீடியோவாக எடுத்து லைக்குகளுக்காக சில இளைஞர்கள், சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தடுக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தீபாவளியையொட்டி பைக்கில், ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர், பட்டாசு வெடித்துக்கொண்டே வீலிங் சாகசம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே திருச்சி – அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹெல்மெட் அணிந்த இளைஞர் ஒருவர், தனது பைக்கில் முன் பகுதியில் வானில் வர்ணஜாலம் காட்டும் பட்டாசு கட்டி அதை பற்ற வைத்து வீலிங் செய்தபடி சாகசம் செய்தார். அப்போது அந்த பட்டாசில் இருந்து வெளியேறிய நெருப்பு சில அடி உயரத்துக்கு எழும்பி ஹெல்மெட் மேல் பட்டு சீறிப்பாய்ந்த படி வெடிக்கிறது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் பட்டாசில் இருந்து வெளியேறிய நெருப்பில் இருந்து தப்பினார். மேலும், அவரது உடையிலும் அதிர்ஷ்டவசமாக தீ பற்றவில்லை. ஒருவேளை பட்டாசு வெடிக்கும்போது பைக் பற்றி இருந்தால் உயிரோடு கருகி பலியாகி இருப்பார். இந்த பட்டாசு வெடிக்கும் போது அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் தங்களது உயிரை கையில் பிடித்துக் கொண்டு சென்றனர்
பைக்கில் வீலிங் சாகசம் செய்வதே குற்றம். அதிலும் அந்த இளைஞர், வீலிங் சாகசம் செய்தபடி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் பட்டாசு வெடிக்கும் காட்சியை சமூக வலைதளத்தில் பார்த்தவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். அந்த வீடியோவில் பிசாசு ரைடர் என்று பதிவிட்டுள்ளார். சாகசம் என்ற பெயரில் தங்களது உயிருக்கு மட்டுமல்லாமல், சாலையில் பயணிக்கும் பிற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இந்த இளைஞர் ஈடுபட்டதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. எனவே அந்த இளைஞர் மீதும், அந்த சாகசத்தை வீடியோ எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் பதிவிட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், தீபாவளியன்று அதிகாலை திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பாட்டாசை பைக் முன்பு பொருத்தி ‘டெவில் ரைடர்ஸ்’ (கோஸ்ட் ரைடர்) என்ற பெயரில் இன்ஸ்டா பக்கத்தில் பைக் சாகசம் பதிவு செய்தது தஞ்சாவூரை சேர்ந்த மணிகண்டன் என்பதும், இந்த சாகசத்தை வீடியோ எடுத்து பதிவிட்டது திருச்சி கல்கண்டார் கோட்டை பகுதியை சேர்ந்த அஜய் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து அஜயை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மணிகண்டனை தேடி வருகின்றனர்.