குத்தாலம்:மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல்நிலைய இன்ஸ்பெக்டராக இருப்பவர் ஜோதிராமன். இவர், கடந்த 15ம்தேதி கடைவீதியில் போலீஸ் வாகனத்தில் சென்றபோது ராஜகோபாலபுரத்தை சேர்ந்த மகேஸ்வரன்(50) என்பவரது 18வயது மகனான கல்லூரி மாணவன், போக்குவரத்துக்கு இடையூறாக நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரை இன்ஸ்பெக்டர் ஜோதிராமன் கண்டித்ததுடன், செல்போனை பறிமுதல் செய்து காவல் நிலையம் வரும்படி கூறிச்சென்றுள்ளார்.
இதையறிந்து மகேஸ்வரன், மகனுடன் குத்தாலம் காவல் நிலையத்திற்கு சென்றார். தனது மகனை அடித்து செல்போனை ஏன் பிடுங்கி வந்தீர்கள் என்று கேட்டு இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி தகராறு ஏற்பட்டது. அப்போது மகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் ஜோதிராமனை கன்னத்தில் அறைந்து விட்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸ் அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தது, மிரட்டியது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மகேஸ்வரன் மற்றும் அவரது மகனை நேற்றுமுன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.