அண்ணாநகர்: அமைந்தகரையை சேர்ந்தவர் முகமது சபீர் (34). இவர் புரசைவாக்கம் பகுதியில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் காலை காந்தி குறுக்கு தெருவில் பைக்கில் சென்றுள்ளார். அப்போது, திருமுல்லைவாயல் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் சாதாரண உடையில் பைக்கில் அந்த வழியாக வந்துள்ளார்.
அது, குறுகிய தெரு என்பதால் 2 பைக்குகளும் செல்ல முடியாமல் எதிரெதிராக நின்றது. இதையடுத்து இன்ஸ்பெக்டர், ‘பைக்கை எடு’ என்று அதிகார தோரணையில் சொன்னபோது முகமது சபீர், ‘வழியில்லாமல் எப்படி செல்வது’ என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த இன்ஸ்பெக்டர் அவரது சட்டை, பணியனை கிழித்து அவரது கைகளை பின்பக்கமாக கட்டி சரமாரியாக தாக்கியுள்ளார்.
பொதுமக்கள் அங்கு வந்து வாக்குவாதம் செய்ததால் இன்ஸ்பெக்டர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதையடுத்து காயம் அடைந்த முகமது சபீரை சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து மருத்துவமனைக்கு வந்து போலீசார் முகமது சபீரிடம் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த புகாரின்படி விசாரிக்கின்றனர்.