பெரம்பூர்: வியாசர்பாடியில் இளம் பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வியாசர்பாடி நேரு நகர் 2வது தெருவை சேர்ந்தவர் அன்பழகன்(58), டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மகள் சாந்தி, தி.நகரில் உள்ள தனியார் வங்கியில் கிரெடிட் கார்டு பிரிவில் பணிபுரிந்து வருகிறார். தந்தையின் கடன் சுமை காரணமாக சாந்தி மன அழுத்தத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் கழிப்பறைக்கு சென்று வந்த சாந்தி திடீரென ரத்த வாந்தி எடுத்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சாந்தி வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வியாசர்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சாந்தி கடிதம் எழுதியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.