Thursday, February 22, 2024
Home » தேர்வுகளில் குளறுபடிகளை தடுக்க பரிந்துரை செய்வதற்கு ஒரு மாதத்தில் விசாரணை குழுவை அமைக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

தேர்வுகளில் குளறுபடிகளை தடுக்க பரிந்துரை செய்வதற்கு ஒரு மாதத்தில் விசாரணை குழுவை அமைக்க வேண்டும்: டி.என்.பி.எஸ்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

by Ranjith

சென்னை: குளறுபடிகளை தடுப்பது தொடர்பாக பரிந்துரைகள் வழங்க, ஒரு மாதத்தில் விசாரணைக்குழுவை அமைக்க டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2011ல் நடத்திய குரூப் 2 தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தேர்வு செய்யப்படாததை எதிர்த்து, திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததால், அதை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பொதுப்பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது தொடர்பான உண்மைத் தகவல்களை மறைத்து, தவறான தகவல்களை வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்வாணைய இணைச் செயலாளர் பிரான்சிஸ் மரிய புவி, துணைச் செயலாளர் ஏ.வி.ஞானமூர்த்தி, சார்புச் செயலாளர்கள் ஜி.சிவகுமார், கே.பாஸ்கர பாண்டியன் மீது ஒழுங்கு நடவடிக்கை துவங்கியுள்ளதாக வும்,பாதிக்கப்பட்ட மனுதாரரை தேர்வு செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் மனுதாரரை பணிக்கு தேர்வு செய்ய வேண்டும். 4 அதிகாரிகளுக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை சட்டப்படி விசாரித்து4 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்வு நடைமுறைகளில் ஏற்பட்ட குளறுபடிகளை கண்டறிய ஒரு மாதத்தில் விசாரணைக் குழுவை தேர்வாணையம் அமைக்க வேண்டும். அக்குழு மூன்று மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடைமுறைகளை விசாரணைக் குழு பரிந்துரையின்படி, தேர்வாணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

You may also like

Leave a Comment

eighteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi