சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் எண்ணற்ற தமிழ் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியதால் தமிழ் சான்றோர் பாராட்டி உள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் மொழி வளர்ச்சிக்காகவும், தமிழை ஆட்சி மொழியாக்கிடவும் அரும்பாடுபட்டு வருகிறார். தமிழறிஞர்களுக்கு விருது வழங்குதல், அரிய தமிழ் நூல்களை நாட்டுடைமையாக்குதல், அயலக பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை தோற்றுவித்தல், திருக்குறள் முற்றோதல்,
தமிழ் கூடல், தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வு, தீராக்காதல் திருக்குறள் திட்டம், தமிழ் பரப்புரை கழகத்தின் வாயிலாக அயல்நாடு மற்றும் வெளி மாநில தமிழர்களுக்கு தமிழ் கற்பித்தல், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் வகையில், ஜனவரி திங்கள் 12ம் நாள் அயலக தமிழர் தின விழா உள்ளிட்ட எண்ணற்ற நன்மை பயக்கும் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசின் சார்பில் திருவள்ளுவர் விருது, அண்ணா விருது, பெரியார் விருது, அம்பேத்கர் விருது, காமராசர் விருது, பாரதியார் விருது உள்ளிட்ட 35 இனங்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த விருது தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியதோடு, புதியதாக இலக்கிய மாமணி விருது தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் 3 அறிஞர்களுக்கு தலா விருது தொகை ரூ.5 லட்சம் வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
தகைசால் தமிழர் விருதும் இவ்வாண்டு முதல் தமிழ் வளர்ச்சி துறையின் வாயிலாக வழங்கப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் பேராசிரியர் க.அன்பழகன், நெடுஞ்செழியன், சிலம்பொலி சு.செல்லப்பன் உள்ளிட்ட புகழ் வாய்ந்த 22 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களின் மரபுரிமையர்க்கு ரூ.2.85 கோடி நூலுரிமைத்தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. கலைஞரின் 97வது பிறந்த நாளன்று கனவு இல்ல திட்டத்தின்கீழ் சாகித்திய அகாதமி விருது மற்றும் கலைஞர் செம்மொழி தமிழ் விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு தமிழ்நாட்டிற்குள் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 6 அறிஞர்கட்கு வீடுகளை முதல்வர் வழங்கினார்.
ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து செயற்படுவதற்காக ரூ.1.25 கோடியும், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட ரூ.2.50 கோடியும் நவி மும்பை தமிழ் சங்க கட்டட மேம்பாட்டிற்கு ரூ.75 லட்சமும் புதுடெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்கிட ரூ.5 கோடியும், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் தமிழ் சங்கத்தில் தமிழ் மொழியை கற்பித்திட ஏதுவாக வகுப்பறைகள் அமைத்திட ரூ.15 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் உணர்வினை ஊட்டி ஊக்கப்படுத்திட, கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள், தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு, இளந்தமிழர் இலக்கிய பயிற்சி பட்டறை, தமிழால் முடியும், இளையோர் இலக்கிய பயிற்சி பாசறை, இலக்கிய வினாடி வினா உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்பட்டு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
இதே போன்று, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாடு முழுவதுமுள்ள 6218 அரசு உயர்நிலை மற்றும் மேனிலை பள்ளிகளிலுள்ள தமிழ் மன்றங்கள் மூலம் – ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு 3 ‘தமிழ்க்கூடல்‘ நடத்திட ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9000 என மொத்தம் ரூ.5 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் அனைத்து படைப்புகளையும் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக தமிழில் மொழிபெயர்த்திட ரூ.5 கோடி வழங்கிட முதல்வர் ஆணையிட்டுட்டுள்ளார்.
மேலும் தமிழக வரலாற்றில் முதன்முறையாக பெரியாரின் சிந்தனைகளை 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக தயாரித்திட தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு ரூ.5 கோடி வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளார்.
முதல்வர் உருவாக்கிய முத்தமிழறிஞர் மொழி பெயர்ப்பு திட்டத்தின் முதல் நூலாக அயல்நாட்டு அறிஞர் டாக்டர் ராபர்ட் கால்டுவெல் எழுதிய ‘A Comparative Grammar of the Dravidian of South Indian Family of Languages’ எனும் நூல் பேராசிரியர் பா.ரா.சுப்பிரமணியனால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு உலக தமிழாராய்ச்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் கூட்டு வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி நடத்தியதும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை வழங்கியும், கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவது உள்ளிட்ட எண்ணற்ற தமிழ்ப்பணி திட்டங்களை நிறைவேற்றி உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் முதல்வர் ஸ்டாலின் நிறைந்துள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
* கடந்த 3 ஆண்டுகளில் பேராசிரியர் க.அன்பழகன், நெடுஞ்செழியன், சிலம்பொலி சு.செல்லப்பன் உள்ளிட்ட புகழ் வாய்ந்த 22 தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்கி, அவர்களின் மரபுரிமையர்க்கு ரூ.2.85 கோடி நூலுரிமைத்தொகையும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது