Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

இன்னிங்ஸ், 98 ரன் வித்தியாசத்தில் ஒடிஷாவை வீழ்த்தியது பரோடா: க்ருணால் ஆட்ட நாயகன்

வதோதரா: ஒடிஷா அணியுடனான ரஞ்சி கோப்பை ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், பரோடா அணி இன்னிங்ஸ் மற்றும் 98 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. வதோதரா, கொடாம்பி ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஒடிஷா 193 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய பரோடா முதல் இன்னிங்சில் 456 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கேப்டன் க்ருணால் பாண்டியா 119 ரன் (143 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்), விஷ்ணு சோலங்கி 98, ஷிவாலிக் ஷர்மா 96 ரன் விளாசினர்.

263 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய ஒடிஷா, 3ம் நாளான நேற்று 165 ரன்னுக்கு ஆட்டமிழந்து இன்னிங்ஸ் மற்றும் 98 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. கார்த்திக் பிஸ்வால் 53*, அனுராக் சாரங்கி 49, சந்தீப் பட்நாயக் 29 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். பரோடா பந்துவீச்சில் நினத் ரத்வா 6, மாகேஷ் பிதியா, பார்கவ் பட் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் சதம் விளாசிய க்ருணால் பாண்டியா ஆட்ட நாயகன் விருது பெற்றார். பரோடா அணி 7 புள்ளிகளை தட்டிச் சென்றது. மும்பை முன்னிலை: அகர்தலாவில் திரிபுரா அணியுடன் நடக்கும் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் மும்பை அணி வலுவான முன்னிலை பெற்றுள்ளது. முதல் இன்னிங்சில் மும்பை 450 ரன் குவித்த நிலையில், திரிபுரா 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 148 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய மும்பை, 3ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 7 ரன் எடுத்துள்ளது.

* ஆந்திரா அணியுடன் விசாகப்பட்டணத்தில் நடக்கும் பி பிரிவு போட்டியில், இமாச்சல் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 478 ரன் எடுத்துள்ளது (கேப்டன் ரிஷி தவான் 195, ஆகாஷ் வசிஷ்ட் 85, அங்கித் கல்சி 53). முன்னதாக, ஆந்திரா முதல் இன்னிங்சில் 344 ரன்னுக்கு ஆட்டமிழந்தது.

* ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடக்கும் பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஐதராபாத் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 536 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய புதுச்சேரி அணி முதல் இன்னிங்சில் 153 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. 3ம் நாள் முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்து இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. கங்கா ஸ்ரீதர் ராஜு 61 ரன், கேப்டன் அருண் கார்த்திக் 14 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.