அண்ணாநகர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக, சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதன்காரணமாக வியாபாரிகள் மற்றும் காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும், காய்கறிகள், பூக்கள், பழங்கள் ஆகிய பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள், வியாபாரிகளின் வருகை குறைந்துள்ளது.
இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி நேற்று காலை காய்கறி, பூ பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அப்போது காய்கறி மார்க்கெட்டில் தேங்கிய மழை நீரை அகற்றும்படி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் கூறுகையில், ‘‘வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்ட நிலையில், மார்க்கெட்டில் மழைநீர் தேங்கினால் அவற்றை சுத்தம் செய்வதற்கு ராட்சத மோட்டார்கள் தயார் நிலையில் உள்ளன. வியாபாரம் பாதிக்கக்கூடிய அளவில் மழைநீர் சூழ்ந்திருந்தால் வியாபாரிகள் உடனே அங்காடி நிர்வாக அலுவலகத்தில் புகார் செய்யலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளுக்கு குறைகள் ஏதும் இருந்தால் அதிகாரிகளை நேரடியாக சந்திக்கலாம். உங்களுடைய புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.