ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது. இப்பணியானது 416 குடியிருப்பு பகுதிகளில் நடக்கிறது. ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சி,முத்தநாடு மந்து பகுதியில் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு துவக்கி வைத்து பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து பழங்குடியினர்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை மற்றும் சென்னை சமூக நீதி மற்றும் சமத்துவ மையத்தினால் இணைந்து மேற்கொள்ளப்படுகிறது. இப்பணியினை மாநிலம் முழுவதும் மேற்கொள்வதற்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் பழங்குடியின மக்களின் தற்போதைய மக்கள்தொகை விவரங்களை சேகரித்தல், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலைமைகளை பற்றிய விவரங்களை சேகரித்தல், நிலவகைப் பயன்பாடு மற்றும் நிலக் குத்தகை பற்றிய விவரங்களை சேகரித்தல்,பழங்குடியினரின் நல்வாழ்வு மற்றும் சுகாதாரம் குறித்த விவரங்களை சேகரித்தல், பழங்குடியினர் நலத்திட்டங்களின் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேகரிக்கப்படும்.
மேலும் பழங்குடியினருக்கான உள் கட்டமைப்பு பற்றிய விவரங்களை சேகரித்தல், பழங்குடியினருக்கான வன உரிமை சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வு மற்றும் பயன்பாடு குறித்த விவரங்களை சேகரித்தல் உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பு பணியானது நீலகிரி மாவட்டத்தில் உள்ள 416 குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இப்பணிக்காக மாவட்டத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களில் 129 பேர் பயிற்சி அளிக்கப்பட்டு, 4 வட்டாரங்களிலும் நடைபெறுகிறது. இக்கணக்கெடுப்பு இரு வார காலத்திற்கு நடைபெற உள்ளது, என்றார். இந்நிகழ்ச்சியில் ஊட்டி ஆர்டிஒ., மகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயகுமார், ஊட்டி வட்டாட்சியர் சரவணகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சலீம், பழங்குடியினர் மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.