சென்னை: இலங்கையில் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு சீன அரசு கடன் வழங்குவதன்மூலம் தங்கள் எல்லையை விரிவுப்படுத்திக் கொள்கிறது. இந்த தொகையை இலங்கை திரும்ப செலுத்த முடியாத பட்சத்தில், சீனாவிடம் இலங்கை அரசு சரணடைய வேண்டிய நிலை ஏற்படும் என ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விவேகானந்தா அரங்கில், ‘ஜி 20 இந்திய தலைமைத்துவத்தின் தீர்மானமும், உலக நாடுகளின் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நேற்று நடந்தது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கருத்தரங்கை தொடங்கி வைத்தார். இதில், வளரும் நாடுகளுக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் அமைப்பின் இயக்குனர் சச்சின் சதுர்வேதி பங்கேற்றார்.
கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடைபெறும் ஜி20 தீர்மானங்கள் குறித்த இந்த கருத்தரங்கில், உலகளாவிய வளர்ச்சியில் நம் எதிர்கால திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்துக் கொள்ள முடியும். உலகம் முழுவதும் தற்போது பல்வேறு சவால்கள் உள்ளன.உலக பொருளாதாரத்தில் சீனா வேகமாக வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. சீனா தங்களை சுற்றியுள்ள ஏழ்மை நாடுகளுக்கு கடன்களை வழங்குகின்றது. உதாரணமாக, இலங்கையில் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்கு கடன் வழங்குகிறது. அதன்மூலம் தங்கள் எல்லையை விரிவுப்படுத்திக் கொள்கிறது. அம்பன் தோட்ட துறைமுகம் சீனா நிதியுதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொகையை இலங்கை திரும்ப செலுத்த முடியாத பட்சத்தில், சீனாவிடம் சரணடைய வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.