‘‘தாமரையின் தன்னிச்சையான போக்கு தொடர்வதால் புல்லட்சாமியின் ஜக்கு தரப்பு கடும் அதிருப்தியில் இருக்கிறதாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘யூனியன் பகுதியான புதுச்சேரியில் தேர்தல் அரசியல் விளையாட்டுகள் ஆரம்பமாகி விட்டதாம்.. ஏற்கனவே தாமரைக்குள் அடுத்தடுத்து பல மாற்றங்கள் அரங்கேறிவரும் நிலையில் புல்லட்சாமியின் கட்சி பிரதிநிதிகளும், எம்எல்ஏக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தாங்களாம்.. தேர்தலுக்கு குறுகிய காலமே உள்ள நிலையில் நியமன எம்எல்ஏ, வாரியத் தலைவர் உள்ளிட்ட பதவிகள் தங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சி பிரபலங்கள் காத்திருந்தார்களாம்.. ஆனால் மாற்றம் செய்யப்பட்ட பதவிகளில் மட்டுமின்றி புதிதாக நியமிக்கப்பட உள்ள பொறுப்புகளிலும் தாமரை பிரதிநிதிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதாம்.. இதனால் புல்லட்சாமியின் ஜக்கு தரப்பு கடும் அதிருப்தியில் உள்ளதாம்.. ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் சீட்டை பறித்த தாமரைக்கு உள்ளடி வேலைகளால் பாடம் கற்பித்திருந்ததாம்.. மீண்டும் மீண்டும் கூட்டணி தலைமையை டம்மியாக்கி தன்னிச்சையாக தாமரை நிகழ்த்தும் பதவி நகர்வுகளுக்கான எதிர்வினைகளை அக்கட்சி விரைவில் சந்திக்கும் என்ற முணுமுணுப்பு ஜக்கு வட்டாரத்தில் பரவலாக எழுந்திருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் பணிமாறுதல் கவுன்சலிங் நடத்தி பதிவேடு துறை உயர் அதிகாரி ஒருத்தர் 20 எல் வரை வசூல்வேட்டை நடத்தியதாக புகார் போயிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மான்செஸ்டர் மாவட்டத்தில் நில அளவை பதிவேடுகள் துறையில் நடந்த பணியிட மாறுதல் கவுன்சலிங்கில் பல லட்சம் கைமாறி இருப்பதோடு, விதிமுறைகளை மீறி பணி இடமாறுதல் நடந்திருக்கிறதா புகார் எழுந்திருக்கு.. இத்துறையில் பணியாற்றி வருவோர் பணியிட மாறுதல் தேவைப்பட்டால் விருப்ப மனு கொடுக்கலாம்னு துறையின் உயர் அதிகாரி அறிவிப்பு வெளியிட்டாராம்.. வழக்கமா காலிப்பணியிடம் குறித்த அறிக்கை வெளியிட்ட பிறகு தான் கவுன்சலிங் நடத்தி இருக்கணும்.. ஆனா ஒரு சில ஊழியர்களுக்கு சாதகமாக பணி மாறுதல் வழங்க வேண்டும் என்பதற்காக காலிப்பணியிடம் குறித்த விவரங்களை வெளியிடாமலேயே ரகசியமாக நடத்தி முடித்தார்களாம்.. விதிமுறைப்படி 3 வருசத்திற்கு மேல் ஒரே வட்டத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு அதே வட்டத்தில் பணியிடம் வழங்க கூடாது. ஆனா கவுன்சலிங்கில் இந்த விதிமுறை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு அதே வட்டத்தில் மறுபடியும் பணியிட மாறுதல் வழங்கப்பட்டு இருக்காம்.. அதேபோல ஒருமுறை வட்ட சார் ஆய்வாளர் பணியிடம் வழங்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக அதே பதவி வழங்க கூடாது என்பது விதிமுறை. ஆனா இந்த விதிமுறையும் மீறப்பட்டிருக்காம்.. அதோடு இல்லாம பணியிட மாறுதல் கவுன்சலிங் நடந்த அன்றே பணி மாறுதல் உத்தரவும் வெளியிடப்பட வேண்டுமாம்.. இதையும் முறையா பின்பற்றலையாம்.. எந்த ஒரு விதிமுறையும் பின்பற்றாம கவுன்சலிங் நடத்தி முடித்திருக்கிறார்களாம்.. இந்த கவுன்சலிங் மூலமாக 20 எல் வரைக்கும் துறையின் உயர் அதிகாரி வசூல் செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஊழியர்கள் புகார் தெரிவித்திருக்காங்க.. இது தொடர்பாக விரிவாக ஒரு புகார் மனுவும் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்காம்.. விதிமுறைகளை பின்பற்றாமல் வசூல் வேட்டைக்காக நடந்த கவுன்சலிங்கை ரத்து செய்துவிட்டு நேர்மையான முறையில் மறுபடியும் நடத்த வேண்டுமென அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘செல்வாக்கு நாளுக்குநாள் குறைவதால் அப்செட் மனநிலைக்கு சென்றுள்ள பலாப்பழக்காரர் தொகுதி மாறிடலாமா என்ற ஆலோசனையில் இருக்கிறாராமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலைக்கட்சி மற்றும் மலராத கட்சிகள் தரப்பு தொடர்ந்து தன்னை கண்டுகொள்ளாமல் ஒதுக்கும் போக்கைக் கண்டு பலாப்பழக்காரர் ரொம்பவே அப்செட் மன நிலையில் உள்ளாராம்.. ஹனிபீ மாவட்ட இரண்டெழுத்து தொகுதியின் எம்எல்ஏவாக மூன்றாவது முறையாக அவர் இருந்தாலும், தொகுதியில் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே ேபாவதை நினைத்து கூடுதல் கவலையில் விழுந்துட்டாராம்.. சொந்த கட்சியின் கரைவேட்டியை கூட கட்ட முடியாத அளவுக்கு அவரது நிலைமை சென்றுவிட்டதாம்.. இதனால் அரசியல்ரீதியாக தொகுதிக்குள் வலம் வருவதை குறைத்துக் கொண்டு விட்டாராம்.. ஒருவேளை இலை -மலராத கட்சிக் கூட்டணியில் குக்கர்காரர் இரண்டெழுத்து தொகுதியை குறிவைத்தால், பேசாமல் புரம் என முடியும் கடலோர மாவட்டத்தின் மரியாதைக்குரிய தொகுதி பக்கமாக சென்று விடலாமா என தனது ஆதரவாளர்களிடம் நாள் முழுக்க தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.. சமுதாய ரீதியாக தனக்கு அந்த தொகுதி சாதகமாக இருக்கும் என்ற மனக் கணக்கில் இருக்கிறாராம் பலாப்பழக்காரர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஏழை மக்களை குறி வைத்து நூறு கோடிகளுக்கு மேல் லபக்கிட்டவங்களை ஜெயிலுக்கு அனுப்பினாலும் கூட, பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களில் ரொம்பவும் கம்மியா தான் புகார்கள் போயிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘மோசடி வழக்குகளை விசாரிக்க, சேலத்துல பொருளாதார குற்றப்பிரிவு செயல்பட்டு வருதுங்க.. இந்த மாநகரில் மோசடிகளுக்கு எப்போதுமே பஞ்சமே இருக்காதுங்க.. அன்னை தெரசா பெயரைச்சொல்லி ஏழை மக்களை குறிவச்சி ரூ.100 கோடிக்கும் மேல் ஒரு கும்பலை சேர்ந்தவங்க லபக்கிட்டாங்களாம்.. இந்த மோசடி கும்பலை பிடிச்சி, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஜெயிலுக்கு அனுப்பிட்டாங்களாம்.. இதில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பல ஆயிரத்தை தாண்டினாலும், புகார் கொடுத்தவர்கள் ரொம்பவும் கம்மியாம்.. ஜெயிலில் இருந்துகிட்டே, வெளியே வந்தவுடன் பணத்தை ரிட்டன் பண்ணிடுவேன் என பணம் செலுத்தியோருக்கு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்ததாம் அந்த கும்பல். இதனை நம்பிய ஏராளமானோர் புகார் கொடுக்க முன்வரவில்லையாம்.. ஆனால், மோசடி நபர்கள் வெளியே வந்தும் பணம் மக்கள் கைக்கு போகலையாம்.. ஒருவர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டால், அவர் தொடர்பான சொத்துகளை முடக்கி, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கப்படுவதுதான் நடைமுறையாம்.. ஆனால் மாங்கனி பொருளாதார குற்றப்பிரிவு அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காமல் குறட்டை விட்டு தூங்குதாம்.. இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களை புகார் கொடுக்க வருமாறு இன்னும் அழைக்கலையாம்.. புகார் வராமல் இருப்பது எப்படி என்பதை மட்டுமே மல்லாந்து படுத்துக்கிட்டு யோசிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் மனக்குமுறலை சொல்றாங்க.. இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அந்த லேடியோ, நான் யாரையும் ஏமாத்தமாட்டேன்னு அடிச்சி சொல்லுதாம்.. இதற்கான பல கோடி துட்டு எங்கே இருக்குன்னு கேட்டால் பதில் இல்லையாம்.. இதில் ஏமாந்தது ஏழை மக்கள் மட்டும் இல்லையாம்.. 50க்கும் மேற்பட்ட பாதிரியார்களும் இருக்காங்களாம்… நாள்தோறும் மாங்கனி மாநகரில் மறியல், தர்ணா, போராட்டம் நடந்துக்கிட்டே இருக்குதாம்.. இதற்கிடையில் இந்த வழக்கில் இதுவரை எடுத்த நடவடிக்கை என்னன்னு அப்பிரிவின் தலைமை ஒரு கேள்வியை கேட்டிருக்காம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
செல்வாக்கு நாளுக்குநாள் குறைவதால் தொகுதி மாறும் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
0