புதுடெல்லி: இன்றைய மதிப்பில் ரூ.1 கோடி பணத்தை கையில் வைத்திருந்தாலும், அந்த பணத்தின் மதிப்பு அடுத்த 30 ஆண்டுகளில் எப்படி மாறும் என்பது குறித்து பொருளாதார நிபுணர்கள் தெரிவித்த கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய பொருளாதார காலக்கட்டத்தை பொருத்தவரையில் கையில் ரொக்கமாக ரூ.1 கோடி பணம் இருந்தால், அடுத்துவரும் எந்த பெரிய செலவையும் கடந்து சென்றுவிடலாம். இன்றைய நடுத்தர குடும்பத்தின் கனவு ரூ.1 கோடி ரொக்கப்பணத்தை எட்டுவதுதான்.
ஓய்வு பெறும் போது கையில் ரூ.1 கோடி கிடைத்தால் அந்த தொகையும், மீதம் உள்ள வாழ்க்கைக்கு போதுமான கணிசமான தொகையாக தோன்றலாம். ஏனெனில் எளிதாக சொந்தவீடு வாங்கலாம், குழந்தைகளை நன்றாக படிக்க வைக்கலாம். ஓய்வுக்கு பிறகு சுற்றுலா போன்ற பல்வேறு திட்டங்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் அடுத்த 10, 20, 30 ஆண்டுகளில் இந்த ரூ.1 கோடி ரொக்கத்தொகை போதுமா?. இந்த கேள்விதான் இன்று பலருக்கும் எழுந்துள்ள ஒன்று.
இன்றைய பொருளாதார பணவீக்கத்தை வைத்து இதுபற்றி நிபுணர்கள் கணித்து இருக்கிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது. எனவே இன்று ரூ.1 கோடி மிகப்பெரிய தொகையாக தோன்றினாலும், அடுத்த 30 ஆண்டுகள் கழித்து இதே ரூ.1 கோடியை பெற்றால் அது போதுமானதாக இருக்காது. அந்த தொகை எதிர்கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் போதுமானதாக இருக்காது. ஏனென்றால் பணவீக்கம் காலப்போக்கில் பணத்தின் மதிப்பைக் குறைக்கிறது.
உதாரணமாக, இன்று ஒரு காரின் விலை ரூ. 10 லட்சம் என்றால், 15 ஆண்டுகளில் அதன் மதிப்பு கணிசமாக அதிகமாகும். பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உணவு அல்லது வாடகைக்கு எவ்வளவு செலவானது, இப்போது எவ்வளவு செலவாகிறது என்பதை கவனித்தாலே, பணவீக்கம் பணத்தின் மதிப்பை எவ்வாறு குறைக்கிறது என்பதை அறியலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பணவீக்க விகிதத்தை 6 சதவீதமாகக் கருதினால் இன்றைய ரூ.1 கோடியின் மதிப்பு அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.55.84 லட்சமாகக் குறையும்.
பணவீக்கத்தால் நீண்ட கால முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை இது விளக்குகிறது. 20 ஆண்டுகளுக்கு பிறகு, 6 சதவீத பணவீக்கத்துடன், ரூ.1 கோடியின் மதிப்பு தோராயமாக ரூ.31.18 லட்சமாக மட்டுமே இருக்கும். 30 ஆண்டுகள் கழித்து பார்த்தால் ரூ.1 கோடியின் மதிப்பு ரூ.17.41 லட்சமாகத்தான் இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். எனவே 6 சதவீத பணவீக்கத்தை கருத்தில் கொண்டு அடுத்து வரும் ஆண்டுகளுக்கு ஏற்ப கூடுதல் தொகை சம்பாதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.