செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் 2023-24ம் நிதியாண்டின் நிதியறிக்கை தாக்கலின்போது, ‘நடப்போம் நலம் பெறுவோம் என்னும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதில், 23.4 சதவீதம் ரத்த அழுத்தம், 7.1 சதவீதம் நீரிழிவு நோய், 10 சதவீதம் ரத்த அழுத்தம் மக்களிடையே உள்ளதாக ஆய்வு குறிப்பிடுகிறது. இந்த தொற்றா நோயின் பற்று பெருமளவு 30-60 வயதுள்ளவர்களிடையே காணப்படுகிறது. எனவே, தொற்றா நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஏற்கனவே நோய் தொற்று உள்ளவர்கள் தங்கள் உடல் நிலையை சீராக வைக்கவும் இத்திட்டம் அறிமுகம் செய்யப்படுகின்றது.
இந்நிலையில், வரும் 4ம் தேதி, தமிழக முதல்வர் சென்னை பெசன்ட் நகரில் உள்ள முத்துலெட்சுமி பூங்காவிலிருந்து இத்திட்டத்தை துவக்கி வைக்கிறார். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் “நடப்போம் நலம் பெறுவோம்” திட்டத்தை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் கொடியசைத்து துவங்க உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மகேந்திரா வோர்ல்டு சிட்டி நுழைவாயிலில் தொடங்கி மகேந்திர ரிசர்ச் வாலி வழியாக மீண்டும் மகேந்திர சிட்டி நுழைவாயில் வரை 8 கிலோமீட்டர் நடைபாதை உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாதங்களில் வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நடைப்பயிற்சி இதே நடைபாதையில் தொடரும். ‘நடப்போம் நலம் பெறுவோம் செயல்படும் முதல் ஞாயிறு நாட்களில், மக்களைத் தேடி மருத்துவம் சிறப்பு மருத்துவ முகாம் நடக்கவுள்ளது. எனவே, பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ‘நடப்போம் நலம் பெறுவோம்’ நடைபயிற்சியில் ஆர்வமுடன் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.