திண்டிவனம்: சென்னையிலிருந்து நேற்று மாலை திருச்செந்தூருக்கு புறப்பட்ட செந்தூர் விரைவு ரயில் நேற்றிரவு 7.17 மணியளவில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் 1வது நடைமேடைக்கு வந்தது. அப்போது திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (30), அவரது மனைவி கோமதி (23) ஆகியோர் 8 மாத கைக்குழந்தை கிருத்திகாஸ்ரீயுடன் ரயிலில் ஏற வேகமாக ஓடி வந்தனர். ரயில் அங்கு 2 நிமிடம் நின்று விட்டு புறப்பட்டுள்ளது. ரயில் நகர்ந்த நிலையில் அவசர அவசரமாக இன்ஜின் பக்கத்தில் உள்ள பெட்டியில் ஏற முற்பட்ட மணிகண்டன் மற்றும் அவரது மனைவி கோமதி ஆகியோர் குழந்தையுடன் தவறி ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையில் உள்ள பகுதியில் விழுந்தனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கூச்சலிட்டதால் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை நிறுத்தினார். பயணிகள் சிலர் பாய்ந்து சென்று மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர். எனினும் அவர்களுக்கு தலை மற்றும் கையில் சிராய்ப்புகள் ஏற்பட்டதால் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கூடுதல் நேரம் ரயிலை நிறுத்தாததை கண்டித்து ரயில்வே ஊழியர்களுடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானபடுத்தி அனுப்பி வைத்தனர்.