ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில், சட்டவிரோத உற்பத்தி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காத தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தை, 300க்கும் மேற்பட்ட சாம்சங் தொழிலாளர்கள் முற்றுகையிட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் முன்னதாக அவர்களை தடுத்து நிறுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் 3 தொழிலாளர்கள், கடந்த 4ம்தேதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
அப்போது, தொழிற்சாலையில் ஒப்பந்த தொழிலாளர்கள் மூலம் உற்பத்தி நடப்பதாகக்கூறி, நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க சிஐடியூ சார்பில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தில் 2 முறை புகார் அளிக்கப்பட்டது. இதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், கடந்த 20ம்தேதி ஊழியர்கள் தொழிற்சாலைக்குள் நுழைந்து உற்பத்தியை தடுக்க முயன்றனர். இதையடுத்து மீண்டும் 14 தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்து நிர்வாகம் நோட்டீஸ் கொடுத்தது. இதற்கு, எதிராக காஞ்சிபுரத்தில் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சட்டவிரோத உற்பத்தி தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்காத தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அலுவலகத்தை, 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு மனு அளிக்க முற்பட்டனர். இதற்கு, போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தொழிலாளர்களை, போலீசார் பேருந்து நிலையம் அருகில் தடுத்து நிறுத்தினர். பின்னர், மாநில செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்ட 7 நிர்வாகிகளுக்கு மட்டும் மனு அளிக்க அனுமதி வழங்கிதை தொடர்ந்து, தொழிலக பாதுகாப்பு சுகாதார அலுவலகத்தில் இணை ஆணையர் பாலமுருகனிடம் சிஐடியூ மனு அளித்துள்ளனர்.