சென்னை: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒன்றான தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய முறையிலேயே அமல்படுத்த மின்சார ஒழுங்குமுறை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. பீக் ஹவர் கட்டணம் ஏற்கெனவே 10% குறைக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 15 சதவீதத்தையும் குறைக்க வேண்டும், 430% உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் கடந்த 25ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அரசு சார்பில் கடந்த 26ம் தேதி சென்னையில் அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அரசிடம் இருந்து நல்ல முடிவு கிடைக்கும் என தொழில் துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழி நிறுவனங்கள் துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் 5 அம்ச கோரிக்கைகளில் ஒரு கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்றது அதனை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இதில், 12 கிலோவாட் கீழுள்ள அனைத்து நிறுவனங்களிலும் 3பி அட்டவணைக்குப் பதிலாக 3ஏ என்ற அட்டவணைக்கு மாற்ற நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, குடிசை மற்றும் மின் நுகர்வோர்க்கு வழங்கப்படும் மின் இணைப்பு 12கிலோவாட் 3ஏ என்ற அட்டவணை அளிக்கப்பட வேண்டும். மேலும், தாழ்வழுத்த நிலை கட்டணத்தை பழைய கட்டண முறையிலேயே அமல்படுத்தவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
* 1 லட்சம் சிறு தொழிற்சாலைகள் பயன்
தமிழகத்தில் 5.80 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில், சிறிய இடங்கள் மற்றும் குடிசைகளில் இயங்கும் சிறு தொழிற்சாலைகளில் குறிப்பாக பிளாஸ்டிக், வெல்டிங், கிரில் தயாரித்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மீண்டும் இந்த பழைய கட்டணம் முறை அமல்படுத்தப்பட்டது. இந்த கட்டண முறை மீண்டும் அமல்படுத்தப்பட்டது மூலம் ஒரு லட்சம் சிறு நிறுவனங்கள் பயனடையும். இந்த ஒரு கோரிக்கை நிறைவேற்றப்பட்டது வரவேற்கத்தக்கது என தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.