புதுடெல்லி: பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து உள்ளது. இதனால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது போல் இந்தியாவுக்குள் ஓடும் பிரம்மபுத்திரா ஆற்று தண்ணீரை சீனா நிறுத்தினால் இந்தியா என்னவாகும் என்று பாகிஸ்தான் புதிய மிரட்டல் விடுத்தது. சீனா அத்தகைய எந்த நடவடிக்கையையும் அறிவிக்கவில்லை என்றாலும், புதிய வகையில் பாகிஸ்தான் இந்த மிரட்டலை தொடங்கி உள்ளது. ஏனெனில் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீனா மிகப்பெரிய அணையை கட்டத்தொடங்கி உள்ளது. அந்த அணை கட்டி முடிக்கப்பட்டால் பிரம்மபுத்திரா ஆற்றில் ஒரு சொட்டு தண்ணீர் வராது என்பது பாகிஸ்தானின் எண்ணம் ஆகும். அதனால் தான் இந்த புதிய மிரட்டலை பாக் மேற்கொண்டுள்ளது.
இதுபற்றி அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியதாவது: வடகிழக்கு இந்தியாவில் பெய்யும் மழையால் தான் பிரம்மபுத்ரா ஆற்றின் மிகப்பெரிய தண்ணீர் வரத்து ஆகும். இமயமலையில் பனிப்பாறை உருகுவதும், திபெத்திய மழைப்பொழிவு குறைவாக இருப்பதும் நதியின் நீர் ஓட்டத்தில் 30-35 சதவீதத்திற்கு மட்டுமே பங்களிக்கின்றன. மீதமுள்ள 65-70 சதவீதம் இந்தியாவிற்குள் உற்பத்தி செய்யப்படுகிறது. அருணாச்சலப் பிரதேசம், அசாம், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பெய்யும் பருவமழை காரணமாக தண்ணீர் ஓட்டம் அதிகரிக்கிறது.
இதனால் தான் இந்தியா-சீன எல்லையில் பிரம்மபுத்திரா நதியின் ஓட்டம் வினாடிக்கு 2,000-3,000 கனஅடியாகும். அதே நேரத்தில் கவகாத்தி போன்ற அசாம் சமவெளிகளில், மழைக்காலத்தின் போது ஓட்டம் வினாடிக்கு 15,000-20,000 கனஅடியாக அதிகரிக்கிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகிய பிறகு, பாகிஸ்தான் இப்போது புதிய அச்சுறுத்தலை தொடங்கி உள்ளது. உண்மையிலேயே சீனா பிரம்மபுத்திரா ஆற்று தண்ணீரை நிறுத்தினால், அது உண்மையில் அசாமில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளத்தைத் தணிக்க இந்தியாவுக்கு உதவக்கூடும். ஏனெனில் பிரம்மபுத்திராவில் ஏற்படும் வெள்ளம் லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச்செய்து, ஒவ்வொரு ஆண்டும் வாழ்வாதாரங்களை அழிக்கிறது. பிரம்மபுத்திரா மேல்நோக்கிச் செல்லும் நதி அல்ல. இது மழையால் இயங்கும் இந்திய நதி அமைப்பு, இந்திய எல்லைக்குள் நுழைந்த பிறகு பலப்படுத்தப்படுகிறது என்று சர்மா கூறினார்.