நெல்லை: இந்தோனேசியாவில் இருந்து கால்நடை தீவனம் என்ற பெயரில் தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.20 கோடி மதிப்புள்ள 49 டன் கொட்டை பாக்குகளை ஒன்றிய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்திற்கு கடந்த 10 தினங்களுக்கு முன் இந்தோனேசியாவில் இருந்து கப்பலில் 4 கன்டெய்னர்கள் வந்தன. அவற்றிற்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கால்நடை தீவனம் இறக்குமதி செய்திருப்பதாக குறிப்பிட்டு இருந்தது. இதில் சந்தேகம் அடைந்த ஒன்றிய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில் முதலில் சிறிது கால்நடை தீவனங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
அவற்றின் பின்புறம் கொட்டை பாக்கு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிலிருந்த 49 டன் எடையிலான கொட்டை பாக்குகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.3.20 கோடியாகும். விசாரணையில் கடத்தி வரப்பட்ட கொட்டைபாக்குகள் அனைத்தும் தூத்துக்குடியில் இருந்து நாக்பூருக்கு புகையிலை பொருட்கள் தயாரிப்பதற்காக கொண்டு செல்லப்பட இருந்தது தெரியவந்தது. ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்த பெங்களூரு நிறுவனத்தை சோதனையிட அதிகாரிகள் சென்றபோது அப்பெயரில் எந்த நிறுவனமும் இல்லை. இதனால் கடத்தலில் ஈடுபட்ட போலி நிறுவனம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.