ஜகார்டா : இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள 3 தமிழர்களுக்கு உதவ இந்திய தூதரகம் முன்வந்துள்ளது. இந்தோனேசியாவில் போதை பொருள் கடத்தல் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது. இந்த நிலையில் மலேசியாவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்ற சரக்கு கப்பலில் 106 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் கடத்திய வழக்கில் கடலூர் ராஜி முத்துக்குமரன், கோவிந்தசாமி விலைக்கந்தன் மற்றும் நாகையைச் சேர்ந்த செல்வதுரை ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தோனேசியாவில் கேரிமுன் நீதிமன்றத்தில் இந்த போதைப்பொருள் வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்தோனேசிய சட்டப்படி மரண தண்டனை விதிக்கக்கூடிய இந்த வழக்கின் விசாரணையின் போது, கைது செய்யப்பட்ட 3 பேரும் நீதிபதிகள் முன் ஆஜராகினர். அப்போது, கப்பல் கேப்டனுக்கு தெரியாமல் போதை பொருளை கப்பலில் பதுக்க முடியாது என்றும் பொய்யான புகாரில் தமிழர்கள் 3 பேரும் சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழர்கள் தரப்பில் வாதம் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கப்பல் கேட்பனை வரும் 11ம் தேதி ஆஜராக உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். இதனிடையே இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கி உள்ள 3 தமிழர்களுக்கு உதவ இந்திய தூதரகம் முன்வந்துள்ளது. சட்ட ரீதியாக உதவ இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் 3 பேர் குடும்பத்தினரை தொடர்புகொண்டு அறிவுறுத்தல் வழங்கி உள்ளனர்.