புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுகவை சேர்ந்த எம்பி அப்துல்லா நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தனி நபர் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசியதாவது, “ நீட் மற்றும் தேசிய தேர்வு முகமையின் தேர்வை ரத்து செய்து மாநில அரசுகளின் அளவுகோல்களின் அடிப்படையில் மருத்துவ சேர்க்கைக்கு மீண்டும் மாற வேண்டும், அவை குறிப்பிட்ட மாநிலங்களின் தேவைக்கு ஏற்க தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
இந்த தேர்வுகள் மூலமாக மாநிலங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. இது மருத்துவ கல்வித்துறையில் மாநில அரசுகளின் சுயாட்சி மீதான மீறலாகும். கல்வியை மாநில பட்டியலுக்கு அதனை மாற்ற வேண்டும்” என்றார். நீட் தேர்வு ரத்து தனிநபர் தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கு முன்னதாக ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி குறுக்கிட்டு, தீர்மானத்தை திரும்ப பெறப்பட வேண்டும்” என்றார்.