இன்றைய நவீன யுகத்தில் மனிதர்களை அச்சுறுத்தும் மறைமுக நபராக இணைய தாக்குதல்கள் வலம் வருகின்றன. நவீன தொழில்நுட்ப வளர்ச்சி மனித வாழ்க்கையை டிஜிட்டல் மயமாக மாற்றி விட்டது என்பதே உண்மை. ஆனால் தொழில்நுட்பங்கள் அதிகரிக்க, அதிகரிக்க இணைய குற்றங்களும் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் புதிய பரிமாணம் தான் டிஜிட்டல் அரெஸ்ட்.
கடந்த அக்.27ம் தேதி மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டிஜிட்டல் கைது குறித்து எச்சரிக்கும் அளவுக்கு இந்த மோசடி நாடு முழுவதும் சமூகத்தின் அடித்தளம் வரை வேகமாக பரவியிருப்பதை உணர முடிகிறது. ‘டிஜிட்டல் கைது’ என்னும் மோசடியில், சைபர் குற்றவாளிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, பாதிக்கப்பட்டவர்கள் ஸ்கைப் அல்லது பிற வீடியோ கான்பரன்சிங் தளங்கள் வழியாக நேரடி கண்காணிப்பில் இருக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். குறிப்பாக தனிநபர்களை குறிவைத்து நடத்தப்படும் இந்த இணையவழி தாக்குதல்களால் பலகோடி ரூபாய் மோசடி நடக்கிறது.
* எப்படி நடக்கிறது?
டிஜிட்டல் கைது மோசடி அழைப்புகள் பெரும்பாலும் மியான்மர், கம்போடியா, லாவோஸ் போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருகின்றன. இந்த நாடுகள் சைபர் குற்றவாளிகளுக்கு ஏற்ற இடமாக மாறி இந்திய மக்களை குறிவைத்து தாக்குகின்றன. இதுபோன்ற நாடுகளை மையமாக வைத்து செயல்படும் டிஜிட்டல் மோசடி கும்பல்கள் அப்பாவி மக்களை, ‘மொபைல் போன்’ வாயிலாக தொடர்பு கொண்டு தங்களை சி.பி.ஐ., அமலாக்கத் துறை, ரிசர்வ் வங்கி, வருமான வரித் துறை போன்ற உயர்மட்ட விசாரணை அமைப்பில் இருந்து அழைப்பதாக அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட நபர் மோசடி வழக்கில் சிக்கியிருப்பதாகக் கூறி மிரட்டி, அவரிடம் விசாரணை நடத்துவர். ஒன்று போதைப்பொருள் வந்திருப்பதாக கூறுவார்கள், இல்லை என்றால் பரிசுப்பொருள் வந்திருப்பதாக தெரிவிப்பார்கள்.
நிதிமுறைகேடு, வரிஏய்ப்பு, பிற சட்ட முறைகேடுகளை கூறி மிரட்டுவார்கள். தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பைத் தொடங்கும் மோசடி கும்பல், பின்னர், பாதிக்கப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மற்றும் ஸ்கைப் போன்ற தளங்கள் மூலம் வீடியோ தொடர்புக்கு மாற வேண்டும் என்று மிரட்டுவார்கள். டிஜிட்டல் கைது வாரண்ட் மூலம் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்துகின்றனர். சில சமயங்களில், இந்த மோசடி செய்பவர்கள், அந்த அழைப்பு முறையானது என்று பாதிக்கப்பட்டவர்களை மேலும் நம்ப வைக்க காவல் நிலையம் போன்ற அமைப்பை உருவாக்குகிறார்கள்.
அதன்பின் சம்பந்தப்பட்டவர்களிடம் ஆதார் அட்டை, பான் அட்டை, வங்கி விபரங்களையும் வாங்குகின்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் அவரை முடக்கி வைத்தபின், மோசடியில் இருந்து விடுபட, குறிப்பிட்ட தொகையை அவர்கள் கூறும் வங்கிக் கணக்கில் செலுத்தும்படி கூறுவர். அவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் கறந்தவுடன் மோசடி கும்பல் மறைந்துவிடும். மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது. இந்த வகையில், நாடு முழுவதும் பலரிடம் பலகோடி மோசடி நடந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல், சைபர் கிரைம் போலீசார் திணறி வருகின்றனர்.
தப்பிப்பது எப்படி?
இந்த மோசடி குறித்த புகார்களை பதிவு செய்யவும், விசாரணை நடத்தவும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ், 14சி எனப்படும் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மட்டும், இதுவரை டிஜிட்டல் கைது தொடர்பாக 6,000க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்ற மோசடிகளுக்கு யாராவது ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் பிரிவின் கட்டணமில்லா உதவி எண் 1930ஐ தொடர்பு கொள்ளுமாறு ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பான புகாரளிக்க www.cybercrime.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் டிஜிட்டல் கைது மோசடி மற்றும் இணைய மோசடி வழக்குகளை விசாரிக்க உயர்மட்டக் குழுவை ஒன்றிய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. அமைச்சகத்தின் உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலரால் இந்தக் குழு கண்காணிக்கப்படும்.
தடுப்பது எப்படி?
டிஜிட்டல் மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள மிக முக்கியமான வழி விழிப்புடன் இருக்க வேண்டும். தனிநபர்கள் சிக்கலில் இருப்பதாகக் கூறும் வரும் அழைப்புகள் குறித்து சந்தேகம் கொள்ள வேண்டும். பணம் கேட்பவர்கள் உண்மையான அதிகாரியாக இருக்க மாட்டார்கள் என்பதை உணர வேண்டும். பதற்ற உணர்வை உருவாக்கி விரைவான நடவடிக்கையை நாடும் சைபர் குற்றவாளிகளால் பயன்படுத்தப்படும் பல்வேறு தந்திரங்களுக்கு அடிபணிந்துவிடக்கூடாது.
அவர்களது அழைப்பில் சந்தேகம் இருந்தால், அவர்கள் குறிப்பிடும் தொடர்புடைய நிறுவனத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு அவர்களின் அடையாளத்தைச் சரிபார்க்க வேண்டும். மேலும் வங்கி கணக்கு, ஆதார் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும். அரசு நிறுவனங்கள் அதிகாரப்பூர்வ தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப் அல்லது ஸ்கைப் போன்ற தளங்களைப் பயன்படுத்துவதில்லை. வரும் அழைப்பு மோசடி என்று நினைத்தால் உடனடியாக சைபர் போலீசார், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பணத்தை இழந்தால் என்ன செய்வது?
டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளாகி பணத்தை இழந்துவிட்டால், உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு புகாரளித்து உங்கள் கணக்கை முடக்க வேண்டும். மேலும் தேசிய சைபர் கிரைம் போர்ட்டலில் (cybercrime.gov.in) புகார் பதிவு செய்ய வேண்டும். இன்றைய நவீன யுகத்தில் கையில் இருக்கும் செல்போன் அனைத்து நல்லது, கெட்டதுக்கும் காரணமாகி விடுகிறது. எனவே நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது அதீத கவனம் தேவை. விழிப்புணர்வுடன் இருந்தால் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியை எளிதில் தடுக்கலாம்.
* இந்தியா கடந்த 2023ம் ஆண்டு 7.9 கோடி இணைய தாக்குதல்களை சந்தித்தது. 2024ல் முதல் மூன்று மாதங்களில் சுமார் 7.4 லட்சம் பேர் இணைய குற்றங்கள் குறித்து புகாரளித்துள்ளதாக அரசாங்க இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்தியாவில் இந்த ஆண்டு இதுவரை சைபர் கிரைம் காரணமாக சுமார் ரூ.2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
* வரும் 2033ம் ஆண்டில் இந்தியா 100 கோடி இணைய தாக்குதல்களை சந்திக்கும். இது 2047ல் 1,700 கோடியாக அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* டிஜிட்டல் மோசடி தொடர்பாக சந்தேகிக்கப்படும் 6 லட்சம் மொபைல் எண்களை முடக்கியுள்ள 14சி, 709 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. சைபர் மோசடி தொடர்பாக 3.5 லட்சம் வங்கிக் கணக்குகளை முடக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதம் விதமாக வரும் மோசடிகள்
தனி மனிதர்களை மட்டுமின்றி ஒரு நிறுவனத்தை அல்லது ஒரு நாட்டின் அரசாங்கத்தை குறி வைத்தும் இணைய குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதன்படி கடந்த 2020ம் ஆண்டில் பல்வேறு வகையான இணைய குற்றங்கள் மூலம் ரூ.1.60 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டு உலகளவில் 5.60 கோடி மால்வேர் தாக்குதல்கள் நடந்துள்ளன.
இதேபோல் பிஷிங் எனப்படும் தவறான மின்னஞ்சல்கள் அல்லது செய்திகளை அனுப்பி நம்மை நம்ப வைத்து நம் தகவல்களை திருடும் இணைய தாக்குதல். ரான்சம்வேர் என்பது நம் கணினி அல்லது கணினியில் சேமித்து வைத்துள்ள முக்கியமான ஆவணங்களை முடக்கி, அதை மீண்டும் சரி செய்ய நாம் பணம் கட்ட வேண்டும் என பணயம் வைக்கும் இணையதள மிரட்டல். இந்த ரான்சம்வேர் தாக்குதல் மூலம் கடந்த 2021ம் ஆண்டில் ரூ.1.68 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டுள்ளது.