சென்னை: எந்த ஒரு தனி மனிதரைப் பற்றி தவறாக விமர்சனம் செய்தால் செருப்பால் தான் அடிப்பார்கள் என திருத்தணியில் சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. இதனை முன்னிட்டு பிரபல நடிகையும் ஆந்திர அமைச்சருமான ரோஜா மற்றும் அவரது கணவரும் பிரபல இயக்குனருமான செல்வமணியுடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அப்போது ஆந்திர மாநில முதல்வராக மீண்டும் ஜெகன்மோகன் ரெட்டி வரவேண்டும் என்ற தனது வேண்டுதலை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளி வேலை காணிக்கையாக வழங்கிவிட்டு சாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை ரோஜா கூறியதாவது: மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆந்திர மாநிலத்திற்கு நல்லது செய்பவர்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவிப்போம். யாருடனும் கூட்டணி அமைத்து போட்டியிட போவதில்லை. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தற்போது கண் அறுவை சிகிச்சை செய்வதற்காக மட்டுமே ஜாமீனில் வந்துள்ளார். மீண்டும் வரும் 21ம் தேதிக்குள் ஜெயிலுக்கு செல்ல வேண்டும். பல்வேறு சாட்சிகளின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இதுவரை 18 முறை தடை ஆணை உத்தரவு வாங்கி வெளியே இருந்தார். தற்போது தண்டனை கொடுக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
பலமான, மக்கள் நேசிக்கிற தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி இருப்பதால் தவறு செய்தவர்களுக்கும் ஊழல் செய்பவர்களுக்கும் கஷ்டமாகத்தான் இருக்கும். சினிமா துறையில் இருந்து தான் அரசியலுக்கு வந்திருந்தாலும் மக்களுக்கு நல்லது செய்து நான் வாழ்க்கையில் முன்னுக்கு வந்திருக்கிறேன். என்னை எதிர்க்க முடியாமல் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒரு பெண் என்றும் பார்க்காமல் என்னுடைய கேரக்டரை பற்றி விமர்சனம் செய்கிறார். தனி நபர் விமர்சனத்தை எந்த ஆணும் பெண்ணும் ஏற்க மாட்டார்கள், செருப்பால்தான் அடிப்பார்கள்.