புதுச்சேரி : புதுச்சேரி அரசின் சமூக நலத்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 19ம் தேதி தொடங்கி வரும் 24ம் தேதி (நாளை) வரை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று மாலை, இந்திராகாந்தி சிக்னல் சந்திப்பில் சகோதரன் திருநங்கையர் குழுவினர் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு வாசகங்கள் ஒலித்திட, அதற்கேற்ப கைகள் மற்றும் உடல் அசைவுகள் மூலமாக வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியை சமூக நலத்துறை இயக்குநர் ராகினி தொடங்கி வைத்தார். ஏற்பாடுகளை துறையின் துணை இயக்குநர் ஆறுமுகம், கள அதிகாரி கருணாநிதி மற்றும் ஊழியர்கள், சகோதரன் அமைப்பின் தலைவர் ஷீத்தல் நாயக் ஆகியோர் செய்திருந்தனர்.
இதேபோல், திருக்கனூர், மதகடிப்பட்டு பகுதிகளில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலமாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
இதில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு, போதை பொருட்கள் உபயோகிப்பதால் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூக விளைவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.