நாட்டிங்காம்: இங்கிலாந்து சென்றுள்ள இந்திய மகளிர் அணி பங்கேற்கும் டி20 தொடரின் முதல் போட்டி இன்று துவங்குகிறது. இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர், 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இன்று டி20 தொடரின் முதல் ஆட்டம் நாட்டிங்காமில் தொடங்குகிறது. தொடர்ந்து ஜூலை 1, 4, 9, 12 தேதிகளில் முறையே 2, 3, 4, 5வது டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த ஆட்டங்கள் பிரிஸ்டோல், லண்டன், மான்செஸ்டர், பர்மிங்காம் ஆகிய நகரங்களில் நடக்கும். ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஜூலை 16ல் சவுத்தாம்டனிலும், 2வது ஆட்டம் ஜூலை 19ம் தேதி லண்டனிலும், 3வது ஆட்டம் ஜூலை 22ம் தேதி செஸ்டர் லீ ஸ்டீரிட்டிலும் நடத்தப்படும்.
இங்கிலாந்தில் டி20 உலக கோப்பை போட்டி நடக்க சரியாக ஒராண்டு உள்ள நிலையில் இரு அணிகளும் இன்றே பயிற்சியை ெதாடங்குகின்றன. இந்த முதல் ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியில் ஜெமீபா, மந்தனா, ஷபாலி, தீப்தி, ரிச்சா என பலரும் கலக்க காத்திருக்கின்றனர். சொந்த மண்ணில் களம் காணும் நடாலியா ப்ரன்ட் தலைமையிலான இங்கிலாந்து அணியிலும் சோபியா, டேனிவியட், டம்மி பிவ்மன்ட் என திறமைகளின் பட்டியல் நீளுகிறது.