சென்னை: 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக தமிழ்நாடு உள்ளது என்று உலக வங்கி வணிக மையம் திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை தரமணியில் உலக வங்கியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய வணிக மையம் திறப்பு விழா நேற்று நடந்தது. இதை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பேசியதாவது: உலக வங்கியுடன் நம்முடைய பாட்னர்ஷிப் 1971ம் ஆண்டு தமிழ்நாடு விவசாய கடன் திட்டத்தில் தொடங்கியது. அப்போது இருந்து, தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பேரிடர் மேலாண்மை, நகர்ப்புற வளர்ச்சி போன்ற பலதரப்பட்ட துறைகளில் உலக வங்கி நமக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. குறிப்பாக, 2022ம் ஆண்டில், டெல்லிக்கு வெளியே தன்னுடைய முதல் மண்டல அலுவலகத்தை உலக வங்கி சென்னையில்தான் அமைத்தார்கள்.
செயல்பாட்டில் இருக்கும் திட்டங்களுக்கு உதவி செய்து, வேகமான மற்றும் வலுவான ஒருங்கிணைப்புக்கும் வழி ஏற்படுத்தி, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவுடனான உலக வங்கியின் உறவை இந்த அலுவலகம் மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. உலக வங்கியுடனான இந்த நீண்ட நெடிய உறவு பல்வேறு துறைகளில் பல நற்பலன்களை வழங்கியிருக்கிறது. முக்கியமான சிலவற்றை மட்டும் பட்டியிலிட விரும்புகிறேன். 1980ம் ஆண்டு மற்றும் 1990ம் ஆண்டு முதல் இரண்டு கட்டங்களில் ‘தமிழ்நாடு ஊட்டச்சத்து திட்டம்’ மற்றும் 2004ம் ஆண்டிலும் 2010ம் ஆண்டிலும் செயல்பாட்டில் இருந்தது தமிழ்நாடு சுகாதார அமைப்புகள் திட்டம்.
இந்த இரண்டும் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலன்களில் முன்னேற்றம் காண சிறந்த முன்னெடுப்பாக அமைந்தது. இன்றைக்கு தமிழ்நாடு இந்த துறைகளில் இந்தியாவிற்கே லீடர் என்று சொல்லக்கூடிய இடத்தை அடைந்திருக்கிறது.
அடுத்து, வறுமையை ஒழித்து ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்கு செயல்படுத்தப்பட்ட ‘வாழ்ந்து காட்டுவோம்’ எனும் முன்மாதிரி திட்டம், 20 லட்சம் ஏழை குடும்பங்கள் இதனால் முன்னேறி இருக்கிறார்கள். பெண்களுக்கான அதிகாரத்தை வழங்கியது மட்டுமல்லாமல், உழவர்களுக்கு நிலைத்த சமுதாய கட்டமைப்புகளையும் இந்த திட்டம் உருவாக்கி தந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், சுய உதவி குழுக்களை ஊக்கப்படுத்தி பெண்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தின் வெற்றிக்கு எடுத்துக்காட்டாக ஒரு தரவை சொல்ல விரும்புகிறேன்.
பெண்கள் தலைமையேற்று நடத்தக்கூடிய 8,400 நிறுவனங்களுக்கு 2022ம் ஆண்டில் இருந்து 2025 பிப்ரவரி வரை ரூ.267 கோடிக்கு இந்த திட்டம் மூலம் கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஊரக பகுதிகளில், 1 லட்சம் பேர் புதிய தொழில்கள் தொடங்கவும், 53 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த திட்டம் சாதனை படைத்திருக்கிறது. அதேபோன்று, பணிபுரியும் பெண்களுக்காக தமிழ்நாடு முழுவதும் நாம் தொடங்கி வரும் தோழி விடுதிகள் திட்டத்திலும் உலக வங்கியின் பங்கு இருக்கிறது. கூடிய விரைவில், சென்னையில் தாழ்தள எலக்ட்ரிக் பேருந்துகள் இயங்கப்போகிறது. அதற்கான திட்டத்திலும் உலக வங்கி நமக்காக உதவியிருக்கிறார்கள்.
மூன்று கட்டமாக செயல்படுத்தப்பட்ட தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மூலமாக, மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. இதில், உலக வங்கி பெரிய அளவில் உதவி இருப்பதுடன், இந்தியா முழுவதும் செயல்படுத்துவதற்கான மாடலாக தமிழ்நாட்டில் இந்த திட்டம் வெற்றியடைந்திருக்கிறது என்று பாராட்டியும் இருக்கிறார்கள். தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தில் மாநிலம் முழுவதும் 750 கி.மீ. சாலைகளை மேம்படுத்தி, விபத்து தடுப்பு பகுதிகள் உள்பட பல்வேறு பராமரிப்பு பணிகளை 2 ஆயிரம் கி.மீ. சாலைகளில் மேற்கொள்ள உதவி இருக்கிறது. தமிழ்நாடு நீர்வள – நிலவள திட்டமானது நீர்ப்பாசன துறையின் நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கு வித்திட்டிருக்கிறது. இதனால், வேளாண்துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.
மிகப்பெரிய கடலோர பரப்பை கொண்டிருக்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால், புயல் உள்ளிட்ட பேரிடர்களால் பாதிக்கப்படக்கூடிய சூழல் நிலவுகிறது. அதற்கு உதவுகின்ற வகையில், ‘தமிழ்நாடு கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டம்’ உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்பட்டு, பேரிடர்களை தாங்கக்கூடிய உட்கட்டமைப்புகளையும், முன்கூட்டியே எச்சரிக்கை தரக்கூடிய அமைப்புகளையும் உருவாக்கி இருக்கிறோம். இந்தியாவிலேயே அதிகமாக நகரமயமாக்கல் நடைபெறும் மாநிலம் தமிழ்நாடுதான். 2030ம் ஆண்டுக்குள் 63 விழுக்காடு தமிழ்நாடு மக்கள் நகர்ப்புறங்களில்தான் வசிப்பார்கள். எல்லோருக்கும் எல்லாம் என்ற நம்முடைய கோட்பாட்டின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கும் சொந்த வீடுகள் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.
அந்த வகையில், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற, சுற்றுச்சூழலுக்கு உகந்த குடியிருப்புகளை ஏழை மக்களுக்கு உருவாக்கி தருவதற்காக நம்முடைய அரசின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்திற்கு ‘டெவலப்மண்ட் பாலிசி லோன்’ என்ற வகையில் 190 மில்லியன் டாலரை உலக வங்கி கடனாக வழங்கி இருக்கிறார்கள். வருங்காலத்தில், உலக வங்கி உதவியுடன் 409.79 மில்லியன் டாலர் மதிப்பிலான முக்கியமான சில திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த போகிறோம். முதலாவதாக, WE-SAFE எனும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம். கடந்த ஆண்டு ஜூன் மாதம் துணை முதல்வரால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்றால், அது பெண்களின் பங்களிப்பு இல்லாமல் முடியவே முடியாது. தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் முதுகெலும்பே பெண்கள்தான். விவசாயம் அல்லாத, வளர்ந்து வரும் துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், அடுத்த 5 ஆண்டுகளில் 1,185 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக, தமிழ்நாடு – கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை நிலையான முறையில் பயன்படுத்துதல் திட்டம். மூன்றாவதாக, தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வுத் திட்டத்தின் இரண்டாம் கட்டம்.
உலக வங்கியுடன் சேர்ந்து இப்படி இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற என்னுடைய அரசு ஆர்வமாக இருக்கிறது. அதற்கு நம்முடைய பாட்னர்ஷிப் தொடர வேண்டும். 9.69 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியாவின் வளர்ச்சி இஞ்சினாக தமிழ்நாடுதான் இருக்கிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் GSDP 36 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2030ல் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று ஒரு பெரிய இலக்குடன் தமிழ்நாடு பயணிப்பது என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும்.
அந்த இலக்கை அடைவதில் உலக வங்கியுடனான நம்முடைய உறவு வெறும் கடனுதவி சார்ந்தது மட்டுமல்ல. தொழில்நுட்பம், கொள்கை உருவாக்கம் மற்றும் அறிவு சார்ந்த ஒரு பாட்னர்ஷிப்-ஆக தான் இதை பார்க்கிறேன். குறிப்பாக, காலநிலை மாற்றம் சார்ந்த நடவடிக்கைகள், SDG இலக்குகள், மகளிருக்கான அதிகாரம் வழங்குதல் ஆகிய இலக்குகளை எட்டுவதில் உலக வங்கியின் உதவி இன்றியமையாதது. நம்முடைய இலக்கை அடைவதில் இருக்கும் சில சவால்களையும் நாம் யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
குறிப்பாக, வளர்ச்சி கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 6 முதல் 7 விழுக்காடு என்று அதிக அளவில் இருக்கிறது. வரும் காலங்களில், புதுமையான மாற்றுதலுக்குரிய கடனுதவியை வழங்கி, மக்களுக்கு தேவையான சமூக – பொருளாதார மேம்பாட்டு தேவைகளுக்கான முதலீடுகளுக்கு உலக வங்கி உதவும் என்று எதிர்பார்க்கிறோம். நீண்டகால இலக்குகளை எட்டுவதில், ஒரு மாடல் மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க உலக வங்கியுடன் தமிழ்நாடு அரசு தொடர்ந்து இணைந்து செயல்படும். நம்முடைய இந்த பயணம் புதுமை, சமூக பொருளாதார சமநிலை மற்றும் நிலையான வளர்ச்சி என்கிற இலக்கில் நிச்சயம் வெற்றியடையும். அதற்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவு வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கனிமொழி சோமு, எம்எல்ஏ அசன் மவுலானா, ஒன்றிய அரசின் கேபினட் செயலாளர் சோமநாதன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், உலக வங்கியின் மேலாண்மை இயக்குநர் வென்காய் ஜாங், உலக வங்கியின் இந்தியாவிற்கான இயக்குநர் அகஸ்டே டானோ கோமே, சென்னை மைய தலைவர் சுனில் குமார், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண்ராய், உலக வங்கியின் உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
* அமெரிக்காவுக்கு பிறகு உலக வங்கியின் மிகப்பெரிய அலுவலகம்
உலக வங்கியின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ளது. அங்குள்ள தலைமை அலுவலகத்திற்கு பிறகு உலக வங்கியின் மிகப்பெரிய அலுவலகம் சென்னையில் தான் அமைந்திருக்கிறது. சென்னை உலகளாவிய வணிக மையம் (குளோபல் பிசினஸ் சென்டர்) கடந்த 2001ம் ஆண்டு 70 அலுவலர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவுடன் அண்ணா சாலையில் வாடகை கட்டிடததில் தொடங்கப்பட்டது. பின்னர், 2006ல் தரமணியில் விரிவாக்கம் செய்யப்பட்ட போது அப்போதைய முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், 2009ல் தரமணியில் அலுவலகம் அமைந்த இடத்தை உலக வங்கி விலைக்கு வாங்கியது.
தற்போது, 1,500க்கும் மேற்பட்ட பணியாளர்களோடு, உலகளவில் 130க்கும் மேற்பட்ட உலக வங்கி அலுவலகங்களின் மூலம், 189 உறுப்பு நாடுகளுக்குச் சேவை செய்யும் ஒரு முக்கிய உலகளாவிய மையமாக வளர்ந்துள்ளது. நவீனமயமாக்கப்பட்ட உலகளாவிய வணிக மையம் விநாடிக்கு 800 ஹேக்கிங் முயற்சிகளை தடுக்கும் பாதுகாப்பு மையமாகவும் சென்னையின் பங்கை உறுதிப்படுத்துகிறது. தற்போது இந்தியாவில் முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் முதல் விருப்பத் தேர்வாக தமிழ்நாடும் சென்னையும் மாறி உள்ளது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான உகந்த சூழல் நிலவுவதால் பல வெளிநாட்டு நிறுவனங்களும் சென்னையில் முதலீடு செய்ய விரும்புகின்றன.அதே போல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அதிகம் தொடங்கப்படுவதும் சென்னையில்தான்.
* 1.12 பில்லியன் டாலர் கடனுதவி
உலக வங்கி தமிழ்நாட்டிற்கு மொத்தம் 1.12 பில்லியன் டாலர் அளவுக்கு வழங்கிய கடனுதவியில், 1) தமிழ்நாடு கிராமப்புற புதுவாழ்வு திட்டம், 2) ஒன்றிய அரசின் விருதைப் பெற்ற தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை திட்டம், 3) தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் உறைவிட மேம்பாட்டு திட்டம், 4) மாற்றுத்திறனாளி தோழர்களுக்கு ஒருங்கிணைப்பு, தடையற்ற சூழல் மற்றும் வாய்ப்புகளை வழங்கும் ‘உரிமைகள்’ திட்டம், 5) அணைகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்தின் இரண்டாவது கட்டம், 6) தமிழ்நாடு காலநிலை நெகிழ்வு நகர்ப்புற வளர்ச்சி திட்டம், 7) சென்னை நகர கூட்டாண்மை நீடித்து நிலைக்கத்தக்க நகர்ப்புற சேவைகள் திட்டத்தின் முதற்கட்டம் என்று 7 திட்டங்கள் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கிறது. இவை அனைத்தும் தனிப்பட்ட முன்னெடுப்புகளாக இல்லாமல், பல்வேறு கட்டமாக செயல்படுத்தும் நீண்ட நெடிய கூட்டாண்மைக்கு இலக்கணமாக இருந்து வருகிறது. வெறும் கடனுதவி என்று இதில் உலக வங்கியின் பங்கை, நாம் சுருக்கி பார்க்க முடியாது. அதையும் தாண்டி, நீடித்த நிலையான மேம்படத்தக்க வளர்ச்சியை தமிழ்நாடு அடைய வேண்டும் என்கிற ஆழ்ந்த அக்கறையின் வெளிப்பாடுதான் இது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
* இந்த ஆண்டு தமிழ்நாட்டின் GSDP 36 லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
* வருங்காலத்தில், உலக வங்கி உதவியுடன் 409.79 மில்லியன் டாலர் மதிப்பிலான முக்கியமான சில திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த போகிறோம்.
* 2030ம் ஆண்டுக்குள் 63 விழுக்காடு தமிழ்நாடு மக்கள் நகர்ப்புறங்களில்தான் வசிப்பார்கள்.
* எல்லோருக்கும் எல்லாம் என்ற நம்முடைய கோட்பாட்டின்படி, பொருளாதாரத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கும் சொந்த வீடுகள் இருக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.