புதுடெல்லி: கேரளா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான அமிதாப் காந்த் கடந்த 1980ல் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்தார். அதன்பிறகு பல்வேறு துறைகளில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த இவர்,2022ல் இந்தியாவின் ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியாக(ஷெர்பா) நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, இந்தியாவின் ஜி20 தலைமை பொறுப்புகளும் இவருக்கு வழங்கப்பட்டன. ஜி20 மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் தயார் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. ஒவ்வொரு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற ஜி20 கூட்டங்களுக்கு அமிதாப் காந்த் தலைமை தாங்கினார்.
இந்த நிலையில் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அமிதாப் காந்த் நேற்று அறிவித்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் பதிவிடுகையில் 45 ஆண்டுகால அரசு சேவைக்குப் பிறகு இப்போது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கான பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தவும், வளர்ச்சி, மேம்பாடு மற்றும் முன்னேற்றத்துக்கு பங்களிக்கவும் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காகவும் பிரதமருக்கு நன்றி கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.