Tuesday, November 28, 2023
Home » அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: போராடி வீழ்ந்தது நேபாளம்

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: போராடி வீழ்ந்தது நேபாளம்

by Dhanush Kumar

* ஜெய்ஸ்வால் அதிரடி சதம்

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் விளையாட இந்திய அணி தகுதி பெற்றது. ஹாங்சோவில் நேற்று நடந்த முதல் காலிறுதியில் இந்தியா – நேபாளம் மோதின. டாஸ் வென்று பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது. கேப்டன் ருதுராஜ் 25, திலக் வர்மா 2, ஜிதேஷ் ஷர்மா 5 ரன்னுடன் வெளியேறிய நிலையில், தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் டி20 சதத்தை விளாசினார். அவர் 100 ரன் எடுத்து (49 பந்து, 8 பவுண்டரி, 7 சிக்சர்) ஆட்டமிழந்தார்.

ஷிவம் துபே 25, ரிங்கு சிங் 37 (15 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து, கடினமான இலக்குடன் களமிறங்கிய நேபாளம் உறுதியுடன் போராடியதால் ஆட்டம் விறுவிறுப்பானது. சமீபத்தில் குறைந்த பந்தில் அரை சதம் விளாசி உலக சாதனை படைத்திருந்த திபேந்திரா சிங், இந்தியாவுக்கு எதிராக 15 பந்தில் 4 சிக்சர்களுடன் 32 ரன் குவித்து மிரட்டினார். அவர் பிஷ்னோய் வீசிய பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சித்தபோது, சாய் கிஷோர் அருமையாக கேட்ச் பிடித்து இந்தியாவை காப்பாற்றினார். புருடெல் 28, மல்லா 29, சந்தீப் 29, கேசி கரன் 18 ரன்னில் ஆட்டமிழந்தனர்.

கடைசி வரை மனம் தளராமல் போராடிய நேபாளம், 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுக்க… 23 ரன் வித்தியாசத்தில் வென்ற இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. இந்திய தரப்பில் ஆவேஷ் கான், ரவி பிஷ்னோய் தலா 3, அர்ஷ்தீப் சிங் 2, சாய் கிஷோர் 1 விக்கெட் எடுத்தனர். இந்திய அணி முழு பலத்துடன் களமிறங்கவில்லை என்றாலும், நேபாள வீரர்களின் ஆட்டம் அனைவரது பாராட்டையும் பெறத் தவறவில்லை. ஆசிய கோப்பை ஒருநாள் தொடரிலும் கூட இந்திய அணியை நேபாளம் திணற வைத்தது குறிப்பிடத்தக்கது. நேபாளம் முக்கிய அணியாக உருவெடுப்பதுடன், அதிரடி ஆட்டக்காரர் திபேந்திரா சிங் ஐபிஎல் தொடரில் கலக்கும் காலமும் கனியும் என எதிர்பார்க்கலாம்.

பாகிஸ்தான் வெற்றி: 2வது காலிறுதியில் நேற்று பாகிஸ்தான்-ஹாங்காங் மோதின. பாகிஸ்தான் 20 ஓவரில் 160 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அமெர் ஜமால் 41 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), மின்ஹாஸ், ஆசிப் அலி தலா 25 ரன் விளாசினர். ஹாங்காங் தரப்பில் ஆயுஷ் சுக்லா 4, முகமது கசான்ஃபர் 3, அனஸ் கான் 2 விக்கெட் அள்ளினர். அடுத்து களமிறங்கிய ஹாங்காங் 18.5 ஓவரில் 92 ரன்னுக்கு சுருண்டது. பாகிஸ்தான் 68 ரன் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?