ராஜ்கோட்: இந்திய அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் 353 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் டேவிட் வார்னர் 56, மிட்செல் மார்ஷ் 96, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களை எடுத்தனர்.
அடுத்த மாதம் உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் போன்ற வீரர்களுக்கு முதல் 2 போட்டிகளில் ஓய்வளிக்கப்பட்டது.
முதல் ஒருநாள் போட்டி கடந்த 22ம் தேதி மொஹாலியில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து 2வது ஒருநாள் போட்டி இந்தூர் ஹோல்கர் மைதானத்தில் கடந்த 24ம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி அபாரமாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்களை குவித்தது. 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதன்படி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது. 399 ரன்கள் குவித்ததன் மூலம் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அடித்த அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
இந்நிலையில் கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி இன்று ராஜ்கோட்டில் தொடங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி, ரோஹித் உள்ளிட்ட வீரர்கள் மீண்டும் அணியில் இணைந்தனர். டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்ஷ், வார்னர் ஆகியோர் களமிறங்கினர்.
இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 56 ரன்கள் எடுத்த நிலையில் வார்னர் அவுட் ஆக, அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித், மார்ஸுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மார்ஷ் 96 ரன்கள் எடுத்து அவுட் ஆக, ஸ்மித் 74 ரன்களுக்கும், லாபுசேன் 72 ரன்களுக்கும் அவுட் ஆகினர். அடுத்து களமிறங்கிய வீரர்கள் பெரிதும் சோபிக்காத காரணத்தால் இமாலய இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்களை எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்டுகளையும், குலதீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்க உள்ளது. ரோஹித் மற்றும் கோலி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவார்கள் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.