லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பேராசிரியையின் குடியுரிமை அந்தஸ்து ஒன்றிய அரசு ரத்து ெசய்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் நிதாஷா கவுல் (காஷ்மீரை சேர்ந்தவர்) வெளியிட்ட பதிவில், ‘என்னுடைய வெளிநாட்டு இந்திய குடியுரிமை அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான செயல்களில் நான் ஈடுபட்டதாக கூறி ரத்து செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்த எனது பணிகளை தண்டிக்கும் வகையில், எனக்கு எதிராக தவறான நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறியுள்ளார்.
முன்னதாக இவர் கடந்த ஆண்டு பெங்களூரு விமான நிலையத்தில் இறங்கிய சில மணி நேரங்களில் நாடு கடத்தப்பட்டார். இவர் இந்தியாவின் இறையாண்மை தொடர்பான கருத்துகளை பல்வேறு சர்வதேச மேடைகளிலும், சமூக ஊடகங்களிலும் பேசி வந்தார். அவர் இந்தியாவையும், நீதிமன்றங்கள், விசாரணை அமைப்புகள், பாதுகாப்பு அமைப்புகள் குறித்து எதிர்மறையான எழுத்துக்கள், உரைகள் மற்றும் பத்திரிகைகளில் கட்டுரைகளை வெளியிடுவதில் ஆர்வமாக செயல்பட்டு வந்தார். மேலும் நிதாஷா கவுல், வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பணியாற்றும் பேராசிரியராக உள்ளார். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின்
ராம் கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார்.
இங்கிலாந்தின் ஹல் பல்கலைக்கழகத்தில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர் ஆவார். கடந்த ஆண்டு கர்நாடக அரசு அவரை மாநாட்டு ஒன்றில் பேச அழைத்திருந்தபோது, பெங்களூரு விமான நிலையத்தில் குடியேற்ற அதிகாரிகள் அவரை பெங்களூருவிற்குள் நுழைய அனுமதிக்க மறுத்தனர். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பற்றி பேசியதற்காக, இந்தியாவிற்குள் நுழைய மறுக்கப்பட்டேன்’ என்று கூறினார். அப்போது கர்நாடக பாஜக, மாநில கர்நாடக அரசையும் கடுமையாக விமர்சித்தது. மேலும் நிதாஷா கவுலை பாகிஸ்தான் ஆதரவாளர் என்றும், இந்திய தேசிய ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர் என்றும் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.