ஐதராபாத்: இந்திய கால்பந்து அணிக்கு தற்போதைய 2024, ஒரு வெற்றி கூட கிடைக்காத வறட்சி ஆண்டாக முடிவுக்கு வருகிறது. குரேஷியாவைச் சேர்ந்த இகோர் ஸ்டிமாக் தலைமை பயிற்சியாளராக மாறிய பிறகு இந்திய அணி கவனிக்கதக்க அணியாக மாறி வருகிறது. இந்திய அணி 2023ம் ஆண்டு விளையாடிய 14 சர்வதேச ஆட்டங்களில் 10ல் வெற்றி பெற்றது. தலா 2 ஆட்டங்களில் தோல்வி, சமனை சந்தித்து இருந்தது. ஆரம்பத்தில் வெற்றிகளை பெற்ற இந்திய ஆண்கள் அணிக்கு இந்த ஆண்டு ஒரு வெற்றி கூட கிடைக்காத வறட்சி ஆண்டாக மாறி உள்ளது. அதிக கோல்கள் அடித்த சர்வதேச வீரர்கள் வரிசையில் 3வது இடத்தில் இருக்கும் சுனில் சேட்ரி, கேப்டன் பதவியில் இருந்து ஜூன் மாதம் விலகினார். அதற்கு முன்பும், பின்பும் இந்திய அணிக்கு வெற்றி வசப்படவில்லை.
இந்த ஆண்டு விளையாடிய 11 சர்வதேச ஆட்டங்களில் ஒன்றில் கூட இந்தியா வெற்றியை பார்க்கவில்லை. இந்த 11 ஆட்டங்களிலும் ஆசிய நாடுகளுடன் மட்டுமே இந்தியா மோதி இருக்கிறது. இதில் பல நாடுகள் தரவரிசையில் இந்தியாவை விட பின் வரிசையில் இருப்பவை. இருந்தும் இந்தியாவுக்கு வெற்றி வசப்படவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆசிய கோப்பைக்கான தகுதிச் சுற்று மற்றும் உலக கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டங்களில் இந்தியா களம் கண்டது. தொடர்ந்து நட்பு ரீதியிலான ஆட்டங்களிலும் சர்வதேச அளவில் விளையாடியது. அப்படி களம் கண்ட 11 ஆட்டங்களில் 6 ஆட்டங்களில் தோல்வியையும், 5 ஆட்டங்களில் டிராவும் கண்டுள்ளது. எனவே இந்த ஆண்டு விளையாடிய 11 ஆட்டங்களிலும் ஒன்றில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லாமல் இந்திய கால்பந்து அணியின் சர்வதேச பயணம் முடிவுக்கு வந்துள்ளது.