சென்னை: தெற்காசியாவிலேயே சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற பார்முலா 4 இரவு நேர ஸ்டிரீட் கார் ரேசின் இந்தியன் எப்4 பிரிவில், ஆஸ்திரேலியாவின் ஹக் பார்ட்டர் (காட்ஸ்பீடு கொச்சி அணி) சாம்பியன் பட்டம் வென்றார். தெற்காசியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடந்ததால் இப்போட்டியைக் காண கடந்த 2 நாட்களாக ஆர்வத்துடன் ரசிகர்கள் திரண்டு வந்திருந்தனர். முதல் நாளான நேற்று முன்தினம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்டியை கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். முதல் நாளில் பந்தயத்துக்கான பயிற்சிகள் மட்டும் நடந்தன. நேற்று காலை 10.15க்கே எல்லா அணிகளும் பயிற்சி செய்ய அனுமதிக்கப்பட்டன. முன்னதாக எப்ஐஏ, எப்எம்எஸ்சிஐ நிர்வாகிகள் பந்தய பாதையின் தன்மையையும், பாதுகாப்பையும் உறுதி செய்தனர். ஜேகே எப்எல்ஜிபி-4, ஐஆர்எல், பார்முலா 4 பந்தயங்கள் தலா இரண்டு ரேஸ்களாக நடைபெற்றன. ஜேகே எப்எல்ஜிபி 4 பந்தயத்தில் தலா 24 கார்கள் இரண்டு 2 ரேஸ்களில் பங்கேற்றன. மற்ற 2 பிரிவுகளில் அணிக்கு தலா 2 கார்கள் என மொத்தம் தலா 12 கார்கள் பந்தயத்தில் பங்கேற்றன. ஒவ்வொரு பந்தயத்தின் முடிவிலும் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு பரிசுக் கேடயங்கள் வழங்கப்பட்டன. அணிகளின் பொறியாளர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டன. முதல் மூன்று பந்தயங்கள் மாலைக்குள் முடிவடைய கடைசி 3 பந்தயங்கள் ஒளி வெள்ளத்தில் இரவில் நடைபெற்றன.
தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ. தொலைவை கடக்க ஜேகே எப்எல்ஜிபி 4 வீரர்கள் குறைந்தபட்சம் 1 நிமிடம், 50 விநாடிகளும், ஐஆர்எல், ஃபார்முலா-4 பந்தய வீரர்கள் தலா 1.40 நிமிடங்களும் எடுத்துக் கொண்டனர். பந்தயத்தின் போது பாதை மாறியவர்கள், மற்ற வாகனத்தின் மீது மோதியவர்கள் உடனடியாக பந்தய பாதையில் இருந்து அகற்றப்பட்டனர். இவ்வாறு நேற்று காலை முதல் இரவு வரை 7 வீரர்கள் பந்தயப் பாதையில் இருந்து விலக்கப்பட்டனர்.
பந்தயங்களுக்கு இடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, சென்னை மேயர் பிரியா, விளையாட்டு துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் இரண்டு கார்களில் பந்தயப் பாதையை சுற்றிப் பார்த்தனர். பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘இப்படி ஒரு சிறப்பான போட்டியை நடத்தியதற்கு பேராதரவு நல்கிய முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் போட்டியில் பங்கேற்றுள்ள இளம் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் கூறிக் கொள்கிறேன்.
பொதுமக்கள் இந்த போட்டிக்கு மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர். பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மாடங்கள் நிரம்பியுள்ளன. அவர்களுக்கு எனது நன்றிகள். மோட்டார் பந்தயம் மட்டுமின்றி எல்லா வகையான விளையாட்டுகளையும் மேம்படுத்துவதிலும் நடத்துவதிலும் நாங்கள் தொடர்ந்து ஆதரவாக உள்ளோம். முக்கியத்துவம் அளித்து வருகிறோம். சென்னையில் முதல் முறையாக இப்படி ஒரு பந்தயம் நடப்பது உண்மையில் மகிழ்ச்சியாகவும் பெருமையாக உள்ளது. நிச்சயமாக இது ஒரு வித்தியாசமான அனுபவம்’ என்று கூறினார். இந்தியன் எப்4 பிரிவில், ஆஸ்திரேலியாவின் ஹக் பார்ட்டர் (காட்ஸ்பீடு கொச்சி அணி) சாம்பியன் பட்டம் வென்றார். பெங்கால் டைகர்ஸ் அணியின் ருஹான் ஆல்வா 2வது இடமும், பெங்களூர் ஸ்பீட்ஸ்டர்ஸ் அணி வீரர் அபய் மோகன் 3வது இடமும் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரிசுக் கோப்பைகளை வழங்கி பாராட்டினார்.