புதுடெல்லி : இந்தியப் பொருளாதாரம் 4 லட்சம் கோடி டாலரை எட்டியதாக அதானியும், பாஜ அரசியல் தலைவர்கள் பலரும் கூறி வருவது வைரலாகி வருகிறது இந்திய பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி அமெரிக்கா டாலராக உயர்த்துவோம் என, பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், இந்திய பொருளாதாரம் 4 லட்சம் டாலர் அமெரிக்க டாலர் என்ற இலக்கை கடந்து விட்டதாக, தொழிலதிபர் அதானி, ஒன்றிய அமைச்சர் கிஷண் ரெட்டி, கஜேந்திர சிங் ஷெகாவத், மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், ஆந்திர மாநில பாஜ தலைவர் புரந்தேஸ்வரி உட்பட பல்வேறு பாஜ தலைவர்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது நேற்று வைரலானது.
இது பிரதமர் மோடி ஆட்சியால் சாத்தியமானதாகவும், கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் ஒன்றிய அரசு மேற்கொண்ட கொள்கை முடிவுகள், சீரமைப்புகள்தான் இதற்குக் காரணம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டிய நிதியமைச்சகமும், தேசிய புள்ளியியல் அலுவலகமும் இந்திய பொருளாதார சாதனை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை. இதனால், இந்திய பொருளாதாரம் 4 லட்சம் கோடி அமெரிக்க டாலர் இலக்கை எட்டியதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரத்தில், இந்த இலக்கை இந்தியா இன்னும் எட்டவில்லை என, அரசு வட்டாரங்களில் கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் – ஜூன் காலாண்டில் இந்திய பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்திருந்ததாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்திருந்தது.