சென்னை: தமிழையும் தமிழர்களையும் ஒன்றிய பாஜ அரசு வஞ்சித்து வருவதாக கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: புதிய கல்விக் கொள்கை, பிரதமர் கல்வி திட்டம் ஆகிய பெயர்களில் இந்தி மொழி பாட மொழியாக சேர்க்கப்பட்டு, கற்பிக்க முன் வந்தால் மட்டுமே, பள்ளிக் கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க முடியும் என நிபந்தனை விதித்து நிதி ஒதுக்க ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. கீழடி தொல்லியல் ஆய்வுக்கு பொறுப்பேற்று செயல்பட்ட இயக்குநர் அமர்நாத் ராமகிருஷ்ணாவை இடம்மாற்றம் செய்து வஞ்சித்துள்ளது.
தேசிய பேரிடர் நிதி கேட்ட தமிழ்நாடு அரசின் முறையீட்டுக்கு மதிப்பளித்து நிதி ஒதுக்கவில்லை. தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தொடர்ந்து புறக்கணித்தும், வஞ்சித்தும் வரும் பாஜ ஒன்றிய அரசின், மக்கள் விரோதக் கொள்கைகளை அனைத்துத் தரப்பு மக்களும் போராடி வருகின்றனர். மாநில உரிமைகளுக்கும், மக்கள் நலனுக்கும் போராடி வரும் பொதுமக்களின் கவனத்தை, மதரீதியாக திசை திருப்பி தேர்தல் ஆதாயம் தேடும் பாஜவின் நடவடிக்கைகளை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.