சென்னை: இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் நெஞ்சுவலி காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினர்.சென்னையில் கடலோர காவல்படையின் கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தின் புதிய கட்டிடத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார். இந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணிகளை இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால் மேற்கொண்டார்.
இந்நிலையில் ஒன்றிய அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த ராகேஷ் பாலுக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று மாலை ராகேஷ் பால் உயிரிழந்தார். அவருக்கு ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் மு.க.ஸ்டாலின் ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.