புதுடெல்லி: இந்திய ராணுவத்திற்கான அதிநவீன அப்பாச்சி ஹெலிகாப்டர்களை தயாரிக்கும் பணியை தொடங்கி இருப்பதாக அமெரிக்க போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. உலகின் அதிநவீன போர் ஹெலிகாப்டரான அப்பாச்சி, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் விமானப்படையில் பயன்படுத்தப்படுகிறது. இந்திய விமானப்படைக்கு 22 அப்பாச்சி ஹெலிகாப்டர் வாங்க கடந்த 2015ல் அமெரிக்க அரசு மற்றும் போயிங் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. இந்த 22 ஹெலிகாப்டர்கள் 2020ம் ஆண்டில் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ.4,168 கோடியில் மேலும் 6 உயர் தொழில்நுட்ப அப்பாச்சி ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இவற்றை தயாரிக்கும் பணி, அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள மெசாவில் நேற்று தொடங்கியதாக போயிங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் என போயிங் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இந்திய ராணுவத்துக்காக அப்பாச்சி ஹெலிகாப்டர் தயாரிப்பு பணி தொடக்கம்: போயிங் நிறுவனம் அறிவிப்பு
previous post