இண்டியானாவெல்ஸ்: இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் மகளிர் ஒற்றையர் 3வது சுற்றுப் போட்டியில் நேற்று, உலகின் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா, இத்தாலி வீராங்கனை லுாசியா பிரான்ஸெட்டியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இண்டியானா வெல்ஸ் நகரில் இண்டியானா வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. கவுரவம் மிக்க போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் இப்போட்டிகளின் மகளிர் ஒற்றையர் 3வது சுற்றில் நேற்று பெலாரசை சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை அரைனா சபலென்கா, இத்தாலி வீராங்கனை லுாசியா பிரான்ஸெட்டி உடன் மோதினார்.
துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சபலென்கா எவ்வித சிரமமும் இன்றி 6-1, 6-2 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இத்தாலியை சேர்ந்த 6ம் நிலை வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி, ரோமானியா வீராங்கனை ஜேக்குலின் அடினா கிறிஸ்டியன் மோதினர். இருவரும் சமபலத்துடன் மோதியதால் முதல் இரு செட்களில் ஆளுக்கு ஒன்றை கைப்பற்றினர். அதைத் தொடர்ந்து நடந்த 3வது செட்டை பாவ்லினி கைப்பற்றினார். இதனால், 6-4, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் பாவ்லினி வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் அமெரிக்க வீராங்கனை எம்மா நவரோ, குரோஷியா வீராங்கனை டான்னா வெகிக்கை, 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.