லீட்ஸ்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் ஆடுகிறது. 2025-27ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குட்பட்ட இதன் முதல் டெஸ்ட் லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. ரோகித்சர்மா, விராட் கோஹ்லி, அஸ்வின் என அனுபவம் இல்லாத வீரர்கள் இல்லாத நிலையில் இந்த தொடர் பற்றி இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் அளித்த பேட்டி: நான். விராட் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரையும் ஐபிஎல் தொடரின்போது சந்தித்தேன். இங்கிலாந்து மண்ணில் அவர்களது அனுபவத்தைப் பற்றிக் கேட்டு தெரிந்துகொண்டேன். ஐபிஎல் தொடரின்போதே நான் அவர்களுடன் இதுகுறித்துப் பேசினேன். இந்திய அணிக்காக கேப்டனாக செயல்படுவது மிகப்பெரிய கவுரவம்.
கோஹ்லி ஓய்வுபெற்ற பிறகு அவரது 4ம் வரிசையில் தன்னை ஆட வைப்பது பற்றி கவும் கம்பீர் என்னிடம் பேசினார். எனவே அந்த இடத்தில் ஆடுவேன். ஒரு கேப்டனாக ஐபிஎல் கோப்பையை வெல்வது, இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது என இவற்றில் எது பெரிது என கேட்டால், டெஸ்ட் தொடர் என்றுதான் சொல்வேன். ஏனெனில் ஒரு கேப்டனாக அடிக்கடி இங்கிலாந்துக்கு சென்று விளையாட வாய்ப்பு கிடைக்காது. அத்துடன், உங்களது தலைமுறை சிறந்த வீரர்கள் 2-3 சுற்றுப்பயணத்தில் மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் ஐ.பி.எல். கிரிக்கெட் அப்படி இல்லை. ஆண்டுதோறும் நடக்கிறது. அதில் ஒவ்வொரு சீசனிலும் கோப்பையை வெல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வசப்படுத்துவது, ஐ.பி.எல். கோப்பையை வெல்வதை விட பெரியது, கவுரவமிக்கது என்பதே எனது கருத்து.
மூத்த வீரர்கள் கடந்த 10 ஆண்டுகளில் உலகில் எங்கு சென்று விளையாடினாலும் வெற்றி பெற முடியும் என்பதைக் காட்டியிருக்கிறார்கள். அதையே நாங்களும் பின்பற்றுவோம். எதிரணியின் 20 விக்கெட்டுகளை வீழ்த்தாமல் டெஸ்ட்டில் வெல்ல முடியாது. நாம் எவ்வளவு ரன்கள் அடிக்கிறோம் என்பது முக்கியமில்லை. இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகளை எப்படி எடுப்பது என்பதே தற்போது எங்களது முக்கிய ஆலோசனை, என்றார். மேலும் எனது கேப்டன்ஷிப் அணுகுமுறையை முழுமையாகப் பார்க்க ஆகஸ்டு வரை (கடைசி டெஸ்ட் நடக்கும் வரை) காத்திருங்கள், என கில் கூறினார்.
ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாட வேண்டும்
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது: கடந்த முறை இந்தியா தொடரை 2-2 என சமன் செய்தது. இந்த முறை இந்தியா 3-1 என தொடரை கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. இங்கிலாந்தில் ஆடும்போது எப்போதும் 3 விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும். முதலாவது வானிலை. 2வது காற்றின் நிலை மற்றும் 3வது ஆடுகளத்தின் தன்மை. களத்தில் ஒரு கட்டத்தில் ஷாட் ஆடுவதே கடினமானதாக இருக்கும். அப்போது கவனமாக இருக்க வேண்டும். பந்துகளை சரியாக விடவும் தக்க நேரத்தில் அடிக்கவும் வேண்டும். சூரியன் நன்றாக வெளியே வந்தால் அது அடித்து விளையாட அழகான மைதானமாக மாறும். அப்போது பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்களை அடிக்க முடியும். இந்தியா எந்தவிதமான போட்டியிலும் இருக்க வேண்டுமானால், ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாட வேண்டும், என்றார்.
பும்ரா பற்றி கவலையில்லை
இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியதாவது: பவுலிங்கில் இந்தியாவின் மிகப்பெரிய ஆயுதம் பும்ரா என்பது உண்மைதான். அற்புதமான பந்து வீச்சாளரான அவர் ஒரு அச்சுறுத்தலாக இருப்பார். ஆனால் ஒரு பந்து வீச்சாளரால் மட்டுமே தனியாளாக தொடரை வென்று கொடுக்க முடியும் என்று நான் கருதவில்லை. வெற்றிக்கு அனைத்து வீரர்களும் அசத்த வேண்டும். கில் மிகச் சிறந்த வீரர். இந்திய அணி மற்றும் ஐபிஎல் என நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளார். ஆனால் இந்திய அணி கேப்டனாக இருப்பதில் நிறைய அழுத்தம் இருக்கும். புதிய கேப்டன் பொறுப்புக்கு வரும்போது உற்சாகமாக இருக்கும். அடுத்த 6 வாரங்களுக்கு அவர் எனது எதிர்ப்பாளர், எனவே நான் அதிகம் பேசமாட்டேன். ஆனால் அவருக்கு வாழ்த்துக்கள், என்றார்.