மும்பை: இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக தென்ஆப்பிரிக்கா ஜாம்பவான் மோர்னே மோர்கல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இந்திய அணியுடன் மோர்னே மோர்கல் இணைந்து பணியாற்ற உள்ளார். டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் தொடர்களில் அனுபவம் வாய்ந்த மோர்னே மோர்கல் இந்திய அணிக்கு எப்படியான மாற்றங்களை கொண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் மோர்னே மோர்கல் குறித்து கவுதம் கம்பீர் பேசிய பழைய வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி உள்ளது.
அதில், “மோர்னே மோர்கலை பயிற்சியாளராக மட்டுமல்லாமல், கேகேஆர் அணியின் கேப்டனாக இருந்தபோது வீரராகவும் வாங்கி இருக்கிறோம். எனது வாழ்நாளில் எதிர்கொண்ட பவுலர்களில் மோர்னே மோர்கல் தான் என்னை அதிக சவால்களுக்கு உட்படுத்தியவர். ஒவ்வொரு முறையும் மோர்னே மோர்கலை எதிர்கொண்ட போதும், அவர் நமது அணியில் இருந்திருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறேன்’’ என்று கூறி உள்ளார். ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கட்டமைத்த போது, பவுலிங் பயிற்சியாளராக மோர்னே மோர்கலை தான் கம்பீர் கொண்டு வந்தார். இவர்கள் இருவரும் 2 ஆண்டுகள் நெருங்கிய நட்பில் இருந்து பணியாற்றி இருக்கின்றனர். கவுதம் கம்பீர் கேகேஆர் அணிக்கு மாறிய போதும், மோர்னே மோர்கல் லக்னோ அணியுடன் பணியாற்றி வந்தார்.
ஆனாலும் மோர்கல் மீதான கம்பீரின் அன்பும், நட்பும் கொஞ்சம் கூட மாறவில்லை. கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த மோர்கல், ஒப்பந்தம் முடிவதற்கு முன்பாகவே பொறுப்பில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக மோர்னே மோர்கல் பொறுப்புக்கு வந்துள்ளார். இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில், மோர்னே மோர்கல் எப்படியான மாற்றங்களை கொண்டு வரப் போகிறார் என்பதும், ஐசிசி கோப்பைகளை கைப்பற்றி பவுலர்களுக்கு எப்படி நம்பிக்கையளிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.