புவனேஸ்வர்: மகளிர் புரோ ஹாக்கி லீக் போட்டியில் உலக நம்பர் 1 அணியாக திகழும் நெதர்லாந்துடன் இந்தியா நேற்று முன்தினம் மோதியது. நெதர்லாந்து வீராங்கனைகள் பியன் சாண்டர்ஸ் 17 நிமிடத்திலும் ஃபே வான்டர் எல்ஸ்ட் 28வது நிமிடத்திலும் அற்புதமாக கோல்கள் அடித்து தங்கள் அணியை முன்னிலைப்படுத்தினர். நெதர்லாந்து அணி வலுவான நிலையில் இருந்த சமயத்தில் ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை தீபிகாவும், 43வது நிமிடத்தில் பல்ஜீத் கவுரும் அடுத்தடுத்து கோல்கள் அடித்து அசத்தினர்.
இதனால் இரு அணிகளும் சம நிலைக்கு வந்தன. அதன் பின் கடைசி வரை யாரும் கோல் போடாததால் வெற்றியை தீர்மானிக்க ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. அதில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியா அபாரமாக வென்றது. இந்த தொடரில் இதுவரை 8 போட்டிகளில் ஆடியுள்ள இந்திய மகளிர் 3வது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.