ஒட்டாவா: கனடாவில் இந்திய மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சடலத்தை தாயகம் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் தன்யா தியாகி. இவர், கனடாவில் உள்ள கார்கேரி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று வந்தார். இவர் கடந்த 17ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். ஆனால், இவரது மரணத்திற்கான காரணம் என்ன என்று இதுவரையில் தெரியவில்லை. அதேவேளையில், எக்ஸ் தளத்தில் வழக்கறிஞர் ஒருவர், பிரதமர் அலுவலகத்தை டேக் செய்து ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில், வடகிழக்கு டெல்லியில் உள்ள விஜய் பார்க் பகுதியை சேர்ந்த தன்யா தியாகி, கனடாவில் படித்து வந்தார். இவர் கடந்த 17ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். தன்யாவின் உடலை இந்தியா கொண்டு வர பிரதமர் மோடி உதவ வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து கனடாவுக்கான இந்திய தூதரகம் கூறுகையில், ‘கால்கேரி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்திய மாணவி தன்யா தியாகியின் திடீர் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கும் விதமாக, கனடா அதிகாரிகளுடனும், குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்து வருகின்றனர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.