நியூயார்க்: காசா போரில் இஸ்ரேலை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் பேசியதற்காக இந்திய வம்சாவளி மாணவி, பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அமெரிக்காவின் மாசசூட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் (எம்ஐடி) தடை விதித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான மாசசூட்ஸ் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா கடந்த மாதம் 30ம் தேதி நடந்தது. அதற்கு முந்தைய நாள் விழாவில் தொடக்க நாள் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், மாணவர் தலைவராக இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பேசுகையில், காசா போரை கண்டித்தும், பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தார்.
மேலும் பலாஸ்தீனத்திற்கு ஆதரவாக அந்நாட்டவர்கள் தலையில் அணியும் துணியை தோளில் போர்த்தியிருந்தார். மேகா வெமுரியின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் உலக அளவில் வைரலானது. இதைத் தொடர்ந்து, மேகா வெமுரி மற்றும் அவரது குடும்பத்தினர் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்தது. பல்கலைக்கழக வேந்தர் மெலிசா நோபல்ஸ் மாணவி வெமுரிக்கு அனுப்பிய இமெயிலில், ‘‘நீங்கள் வேண்டுமென்றே தொடக்க விழா ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தினீர்கள். கருத்து சுதந்திரத்தின் உரிமையை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்.
ஆனால் முக்கியமான நிறுவன விழாவை சீர்குலைக்கும் வகையில் போராட்டத்தை தூண்டும் வகையிலான பேச்சு நடத்தை விதிகளை மீறுவதாகும்’’ என கூறப்பட்டிருந்தது. மேகா வெமுரி அளித்த பேட்டியில், ‘‘எம்ஐடி நிர்வாகத்தின் தங்கள் கடமைகளை மீறி, உரிய நடைமுறை இல்லாமல் குறிப்பிட்ட கொள்கை மீறப்பட்டதற்காக என்னை தண்டித்தததில் ஏமாற்றமடைகிறேன். பேச்சு சுதந்திரத்தை எம்ஐடி ஆதரிப்பதாக கூறுவது பாசாங்குதனம்’’ என கண்டித்துள்ளார். அதிபர் டிரம்ப் நிர்வாகம், உயர்கல்வி நிறுவனங்களில் போராட்டங்களை தூண்டும் மாணவர்களை நாடு கடத்தி வரும் நிலையில், எம்ஐடியின் இந்த நடவடிக்கை உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.