மும்பை: பங்குச்சந்தையில் நேற்று கடும் சரிவு ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் நேற்று ஒரே நாளில் ரூ.15.32 லட்சம் கோடியை இழந்தனர். தொடர்ந்து 2 நாட்களில் ரூ.19,78,800 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை 886 புள்ளிகள் சரிந்து 80,981.95 புள்ளிகளில் முடிவடைந்தது. அன்றைய தினம் பங்குகளின் மதிப்பு ரூ.4,46,004 கோடி சரிந்தது. வாரத்தின் முதல் நாளான நேற்று வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் சந்தை 78,588 புள்ளிகளுடன் சரிவுடனேயே துவங்கியது. வர்த்தக இடையில் 79,781 புள்ளிகள் வரை சென்றாலும், அதிக பட்சமாக 78,296 புள்ளிகள் வரை அதாவது, 2,686 புள்ளிகள் சரிந்தது. வர்த்தக முடிவில், முந்தைய வர்த்தகத்தை விட 2,222 புள்ளிகள் சரிந்தது.
இதனால் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.4,57,16,946 கோடியில் இருந்து ரூ.15,32,796 கோடி சரிந்து ரூ.4,41,84,150 கோடியானது. இதன்மூலம் தொடர்ந்து 2 நாட்களில் பங்குகளின் மதிப்பு ரூ.19,78,800 கோடி சரிந்துள்ளது. இந்துஸ்தான் யூனிலீவர், டாடா கன்ஸ்யூமர், நெஸ்ட்லே, பிரிட்டானியா மற்றும் எச்டிஎஃப்சி லைஃப் தவிர அனைத்து பங்குகளும் சரிவை சந்தித்தன. அதிகபட்சமாக டாடா மோட்டார்ஸ் பங்குகளின் மதிப்பு 7.4 சதவீதம், ஓஎன்ஜிசி 6.39 சதவீதம், அதானி போர்ட்ஸ் 5.92 சதவீதம் சரிவடைந்தன. இதுபோல், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி 662 புள்ளிகள் அதாவது, 2.68% சதவீதம் சரிந்து 24,056 புள்ளிகளாக இருந்தது.
அமெரிக்க பொருளாதாரம் சற்று சரிவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், உலக அளவில் பங்குச்சந்தைகள் நேற்று கடுமையாக சரிந்தன. இது இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. இதுபோல், கடந்த ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு குறியீடு சரிவடைந்தது. அந்நாட்டில் வேலையின்மை விகிதம் 4.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால், பொருளாதார ஸ்திரத்தன்மை மீதான அச்சறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவே பங்குச்சந்தை சரிவுக்கு பிரதான காரணமாக பார்க்கப்படுவதாக சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதவிர, ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதற்கு ஈரான் பழிவாங்க துடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இதுவும் பங்குச்சந்தை சரிவுக்கு காரணமாகியுள்ளது. இதுமட்டுமின்றி, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்திய நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், சந்தையை உற்சாகப்படுத்தும் வகையில் அமையவில்லை.
இதனால், தற்போது பங்குச்சந்தை மதிப்பு அதிகமாக இருந்தாலும், இந்த மதிப்பு இதே நிலையில் தொடர்ந்து நீடிக்கும் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்களிடம் காணப்படவில்லை. எனவே, பங்குச்சந்தை கடுமையாக சரியத் துவங்கிய நிலையில், லாபம் கருதி பலர் பங்குகளை விற்று விட்டனர். நரேந்திர மோடி தலைமையில் 2014ம் ஆண்டு மே மாதம் 26ம் தேதி முதல் முறையாக பாஜ கூட்டணி ஆட்சிக்கு வந்தபோது, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 25,000 புள்ளிகளை கடந்து 25,175 ஆக இருந்தது. அடுத்த 5 ஆண்டுகளிலேயே இது 14,396 புள்ளிகள் அதிகரித்து, 39,571 புள்ளிகளானது.
தற்போது 3வது முறையாக பாஜ கூட்டணிகள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த நிலையில், சென்செக்ஸ் 80,000 புள்ளிகளை தாண்டி விட்டது. இவ்வாறு பாஜ ஆட்சியில் பங்குச்சந்தைகள் உயரும்போதெல்லாம், செயற்கையான உயர்வு என சந்தை நிபுணர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்து வந்தனர். அதற்கேற்ப, சந்தையில் பாதிப்பு ஏற்படும்போது முதலீட்டாளர்களுக்கு கடுமையான, ஈடுசெய்ய முடியாத இழப்பாக அது அமைந்து விடுகிறது. பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், இத்தகைய திடீர் இழப்புகள் முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளன.