புதுடெல்லி: அந்நிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வௌ்ளியன்று(22ம் தேதி) 48 காசுகள் சரிந்து ரூ.83.61ஆக வீழ்ச்சி அடைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி ரூபாய் மதிப்பு அதன் மிகக்குறைந்த அளவாக ரூ.83.40ஆக இருந்தது. வரலாறு காணாத இந்த வீழ்ச்சி குறித்து காங்கிரஸ் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
இதுதொடர்பாக காங்கிரஸ் ஊடக பிரிவு செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில், “வௌிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை எவ்வளவு விலைக்கு வாங்குகிறோம் என்பதை ரூபாயின் மதிப்பு தீர்மானிக்கிறது. 2014ல் மோடி ஆட்சிக்கு வரும்போது வௌிநாட்டில் இருந்து 1 டாலருக்கு சரக்கு வந்தால் நாம் ரூ.50 கொடுக்க வேண்டும்.
அதே மதிப்புள்ள 1 டாலருக்கு நாம் இப்போது ரூ.84 தருகிறோம். இந்தியா ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் இப்போது கூடுதலாக ரூ.25 செலுத்துகிறோம். எரிபொருள் விலை அதிகமாகும் போது வாங்கும் சரக்கு போக்குவரத்தின் செலவு அதிகரிக்கிறது. அதனால் உணவு உள்பட அனைத்து பொருள்களின் விலையும் உயர்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும்.
அதன் காரணமாக நாம் வாங்கும் பொருளின் இஎம்ஐ அதிகமாகும். ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக வீட்டுக் கடன், வாகன கடன், கல்வி கடன் போன்ற கடன்களுக்கு வங்கிக்கு அதிக வட்டி செலுத்துகிறோம். 2014க்கு முன்பு ரூபாய் மதிப்பு சரிவையும், டாக்டர் மன்மோகன் சிங் வயதையும் ஒப்பிட்டு அநாகரீக கருத்துகள் சொன்ன அப்போதைய குஜராத் முதல்வர் மோடியை காணவில்லை. அவர் எங்கே போய் விட்டார்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.