புதுடெல்லி: இந்திய ரயில்வே பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 213 பேரை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று சந்தித்து உரையாடினார். அப்போது, “மற்ற எந்தவொரு வணிக நிறுவனத்தையும் போலன்றி ரயில்வே சாதாரண மக்களின் கனவுகளை சுமந்து பயணிக்கும் சமூகத்தின் உயிர் நாடியாக உள்ளது. ரயில்களும், அதன் பயணங்களும் மக்கள் வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. உள்ளூர் ரயில் பயணம் முதல் வௌியூர் ரயில் பயணங்கள் வரை ஒவ்வொன்றும் எண்ணற்ற கதைகளை உருவாக்கும் சாட்சியமாக இருந்து வருகிறது.
பொதுவாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான நிறுவனமாக ரயில்வே இருப்பதால் தேசமும், அதன் மக்களும் உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாடு சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய ஊக்கத்தை அளிக்கிறது. நாட்டுக்கு திறமையான பல்வழி போக்குவரத்து தேவை.
அதற்காக சாலை, ரயில், விமானம், கப்பல் என அனைத்து போக்குவரத்தும் ஒன்றிலிருந்து மற்றொன்றை தனிமைப்படுத்தாமல் ஒருங்கிணைப்புடன் கையாளப்பட வேண்டும். தற்சார்பு இந்தியா மற்றும் வளர்ந்த இந்தியா என்ற இலக்கை அடைய மற்ற துறைகளின் அதிகாரிகளுடன் நீங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். இங்குள்ள இளம் அதிகாரிகள் அனைவரும் நவீன மயமாக்கப்பட்ட, பசுமையான ரயில்வேயை உருவாக்குவதிலும், வளர்ந்த இந்தியாவை கட்டியெழுப்புவதிலும் ஆக்கப்பூர்வமாக பணியாற்ற வேண்டும்” இவ்வாறு கூறினார்.