கொழும்பு: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கிய கஞ்சர் கப்பலானது 3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட குக்ரி வகை ஏவுகணை தாங்கிய கடற்படை கப்பலாக கஞ்சர், 3 நாள் பயணமாக இலங்கையின் திரிகோண மலை துறைமுகத்துக்கு சென்றுள்ளது. இது தொடர்பாக கொழும்புவில் இருக்கும் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புக்கான சவால்களை திறமையுடன் எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதற்காகவும், இந்தியா-இலங்கை இடையிலான ஒத்துழைப்புக்காக சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டும் இந்திய கடற்படை கப்பல் கஞ்சர் இலங்கை வருகிறது. கப்பலின் கமாண்டிங் அதிகாரி, துப்பாக்கி மற்றும் ஏவுகணை இயக்குவது தொடர்பான தொழில்நுட்பம் குறித்து கிழக்கு கடற்படை தளபதியுடன் கலந்துரையாடுகிறார். இந்த கப்பலை 30ம் தேதி (இன்று) வரை பொதுமக்கள் பார்வையிடலாம். திரிகோண மலையில் இருந்து இலங்கை கடற்படையுடன் கஞ்சர் ஏவுகணை கப்பல் கூட்டு பயிற்சியில் ஈடுபடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.