புதுடெல்லி: ஹாக்கி விளையாட்டுக்கென தேசிய அளவிலான அமைப்பு, குவாலியர் நகரில் துவக்கப்பட்டு 100ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை சிறப்பான வகையில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் தேசிய விளையாட்டாக ஹாக்கி திகழ்கிறது. கடந்த 1925, நவ. 7ம் தேதி, மத்தியப்பிரதேத்தின் குவாலியர் நகரில் தேசிய அளவிலான ஹாக்கி அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் பின் நாடு முழுவதும் ஹாக்கி விளையாட்டு அதிகளவில் விளையாடப்பட்டது. இந்திய ஹாக்கி, 99 ஆண்டுகளை நிறைவு செய்து, நேற்று 100ம் ஆண்டில் அடியெடுத்து வைத்தது. நம் ஹாக்கி அணி, ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கம் வென்று அரிய சாதனை படைத்துள்ளது. தவிர பல முறை வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.
கடந்த 1980ம் ஆண்டுக்கு பின் இந்திய ஹாக்கி விளையாட்டில் பெரும் தேக்க நிலை காணப்பட்டது. சமீப காலமாக ஹாக்கி, மீண்டும் புத்துணர்ச்சி பெற்று பெருவாரியாக விளையாடப்பட்டு வருகிறது. கடந்த 2021ல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும், இந்தாண்டு பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்த போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கங்களை வென்று மீண்டும் எழுச்சி பெற்றது. இந்நிலையில், இந்திய ஹாக்கி 100ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை இந்தாண்டு முழுவதும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இந்திய ஹாக்கி லீக்கின் பெண்கள் அணியும் துவக்கப்பட உள்ளது.