டெல்லி: கடந்த 11 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை மோடி அரசு சீரழித்துவிட்டது என காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; மக்களின் வாழ்க்கைத் தரம் உயருவதற்கான நடவடிக்கைகள் குறைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. மோடி அரசின் கொள்கைகள் கார்ப்பரேட்டுகளுக்கு பயனளிப்பதாக உள்ளன. ரிசர்வ் வங்கி அறிக்கையில் உள்ள புள்ளி விவரங்கள் பொருளாதாரம் குறித்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது.
தரவுகளை மாற்றி அமைத்தும், உண்மையான பிரச்சனைகளை மறைக்கவும் மோடி அரசு முயற்சி செய்கிறது. மோடி ஆட்சியில் நாட்டின் கடன் அளவு வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கடந்த 2 ஆண்டுகளில் தனிநபர் கடன் மேலும் ரூ.90,000 அதிகரித்து ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு இந்திய குடிமகனும் ஏன் ரூ.4.8 லட்சம் கடன் சுமையை ஏற்க வேண்டிய நிலை உள்ளது? மொத்த வருமானத்தில் 25.7 சதவீதத்தை கடனை திருப்பிச் செலுத்துவதற்கே செலவிடுகிறார்கள்.
தனிநபரின் மொத்த கடனில் 55% கிரெடிட் கார்டு, மொபைல் கடன் தவணையாக உள்ளது. பொதுமக்கள் கடனாளிகளாக உள்ள நிலையில் மோடியின் நண்பர்கள் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறார்கள். அரசின் திட்டங்கள் கூட்டு முயற்சியால் செயல்படுத்தப்படும் போது நாட்டின் கடன் அதிகரிப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.