புதுடெல்லி: இந்திய மருத்துவ மாணவர்கள் இனிமேல் வெளிநாடுகளில் பணி புரியலாம் என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ கல்வியை வழங்கி வரும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு 10 ஆண்டுகால அங்கீகார அந்தஸ்தை வழங்கியுள்ளது. இந்த தகவலை ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக்கல்விக்கான உலக கூட்டமைப்பு அங்கீகாரம் என்பது இந்திய மருத்துவ பட்டதாரிகளுக்கு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற உலக அளவில் அங்கீகாரம் தேவைப்படும் பிற நாடுகளில் பணி புரிய உதவும். தற்போது தேசிய மருத்துவ ஆணையத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் 706 மருத்துவ கல்லூரிகளுக்கும் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.