டெல்லி: 2024-25ல் இந்திய வங்கிகளில் நடந்துள்ள மோசடிகளின் மதிப்பு ரூ.36,014 கோடியாக அதிகரித்துள்ளது என ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. வங்கிகளில் மோசடி செய்யப்பட்டது கடந்த ஆண்டு 3 மடங்கு அதிகரித்துள்ளது. வங்கி மோசடிகளில் பெரும்பாலானவை டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை மூலம் நடந்துள்ளது. அதே நேரத்தில் 2023-24ஐ விட 2025ல் வங்கியில் நடந்துள்ள மோசடிகளின் எண்ணிக்கை 34% குறைந்துள்ளது. 2024-25ல் நாடு முழுவதும் 23,953 வங்கி மோசடி சம்பவங்கள் நடந்துள்ளது.
தனியார்துறை வங்கிகளில் 14,233 மோசடிகளும் பொதுத்துறை வங்கிகளில் 6,935 மோசடிகளும் நடந்துள்ளன. தனியார் வங்கிகளில் மோசடி எண்ணிக்கை அதிகமாக இருந்த போதிலும் மோசடி தொகை ரூ.10,088 கோடியாகும். பொதுத்துறை வங்கிகளில் மோசடி எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும் மோசடி தொகை ரூ.25,667 கோடியாகும். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் கடன்களில் மோசடிகள் 2025 நிதியாண்டில், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் பிரிவில் 13,516 மோசடிகள் நடந்துள்ளன.
இது வங்கித் துறையில் மிக அதிகம். இதுபோன்ற மோசடிகள் மொத்த வழக்குகளில் 56.5% ஆகவும், ரூ.520 கோடி இழப்பை ஏற்படுத்தியுள்ளன. கடன் பிரிவில் மோசடிகள் குறைவாக இருந்தாலும் (7,950 வழக்குகள்), மொத்த இழப்பில் 92%க்கும் அதிகமானவை (ரூ.33,148 கோடி) இந்தப் பிரிவில் தான்.